கும்பகோணத்தில் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள முச்சந்தி தடுப்பூசி முகாம்' மூலம் 90 நாட்களில் 18 ஆயிரம் பேருக்கு மேல் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கும்பகோணம் மடத்துத் தெரு, காமாட்சி ஜோசியர் தெரு சந்திப்பு பகுதி 3 சாலைகள் சந்திக்கும் முச்சந்தி பகுதியாகும்.
இந்த பகுதியில் நகராட்சி 10-வது வார்டைச் சேர்ந்த முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சோடா. இரா.கிருஷ்ணமூர்த்தி தனது வார்டு மக்கள் மட்டுமின்றி அனைத்துப்பகுதி பொதுமக்களும் பயன்பெறும் வகையில், தனது பெட்டிக்கடை அருகே சாமியானா பந்தல் அமைத்து தொடங்கிய கரோனா தடுப்பூசி முகாம் நேற்று வரை தொடர்ந்து 90 நாட்கள் நடைபெற்றுள்ளது. இதில், இதுவரை 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.
இந்த முகாம் தொடங்கப்பட்ட நாளில் பொதுமக்கள் அதிகளவில் வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டதால், நகராட்சி நிர்வாகம் அந்த இடத்தில் நாள்தோறும் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை நடத்தி வருகிறது. கும்பகோணத்தில் உள்ள நகராட்சி மருத்துவமனைகளை விட, இந்த முச்சந்தி தடுப்பூசி முகாமில் அதிகளவிலான மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து சோடா இரா.கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, ‘‘எனது வார்டு பகுதியில் உள்ளவர்கள் வெகுதூரம் அலையக்கூடாது என்பதால், எனது பெட்டிக்கடை அருகே கரோனா தடுப்பூசி முகாம் அமைக்க வேண்டும் என கும்பகோணம் எம்எல்ஏ சாக் கோட்டை க.அன்பழகன், நகராட்சி ஆணையர், நகர்நல அலுவலரிடம் கேட்டேன். அவர்கள் இங்கு தடுப்பூசி முகாமை தொடங்கிவைத்ததுடன், முழுஒத்துழைப்பும் வழங்கினர். இங்கு நாள்தோறும் மருத்துவர், செவிலியர்கள் வந்து கரோனா தடுப்பூசியை செலுத்துகின்றனர். பொதுமக்கள் அதிகளவில் வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்கின்றனர்’’ என்றார்.
இதுகுறித்து அனைத்து வணிகர் சங்க கூட்டமைப்பின் செயலாளர் வி.சத்தியநாராயணன் கூறும்போது, ‘‘வணிகர் சங்கம் சார்பில் கரோனா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டது. அப்போது ஏராளமானோர் தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர். அங்கு வந்த சோடா.இரா.கிருஷ்ணமூர்த்தி, இதுபோல தனது பெட்டிக்கடை அருகிலும் முகாம் நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டதால், உடனடியாக அங்கு முகாம் அமைக்கப்பட்டு, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அனைத்துப் பகுதி மக்களும் எளிதில் வந்துசெல்லும் இடம் என்பதால், இங்கு நாள்தோறும் ஏராளமானோர் தடுப்பூசி செலுத்திக்கொள்கின்றனர்’’ என்றார்.
இதுகுறித்து நகர்நல அலுவலர் மருத்துவர் பிரேமா கூறியது:
கும்பகோணம் முச்சந்தி சிறப்பு முகாம் தொடர்ந்து 90 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் தினமும் 200 முதல் 300 பேர் வரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். மெகாமுகாம் நாட் களில் 500-க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இந்த முகாமில் நேற்று வரை 18,054 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago