வேலூரில் காவலரின் : வங்கி கணக்கில் இருந்து : ரூ.50 ஆயிரம் துணிகர திருட்டு :

By செய்திப்பிரிவு

வேலூரில் வடக்கு காவல் நிலையம் அருகில் உள்ள காவலர் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப் பவர் பிரபு (33). இவர், தெற்கு காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இவர், பொதுத்துறை வங்கி ஒன்றில் வைத்துள்ள கணக்கை நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் வைத்துள்ளார். அதில், பணமும் இருப்பு வைக்கவில்லை.

இதற்கிடையில், பிரபுவின் செல்போனுக்கு சில நாட்களுக்கு முன்பு வந்த குறுஞ்செய்தியில் ‘உங்கள் வங்கிக் கணக்கை புதுப்பிக்கா விட்டால் கணக்கு முடக்கப்படும்’ என இருந்தது. அத்துடன் கணக்கு விவரங்களை பதிவேற்றம் செய்வதற்கான ஆன்லைன் முகவரியும் இருந்தது. இதையடுத்து, அந்த ஆன்லைன் இணைப்பின் வழியாகச் சென்று வங்கிக்கணக்கு தொடர்பான விவரங்களை பதிவேற்றம் செய்துள்ளார்.

குறுஞ்செய்தி மூலம் வங்கிக் கணக்கு விவரங்களை பெற்ற மோசடி கும்பல், பிரபுவின் கணக்கில் இருந்து ரூ.80 ஆயிரத்துக்கு கடன் கோரி விண்ணப்பித்துள்ளனர். அதன்படி, வங்கிக் கணக்கில் ரூ.80 ஆயிரம் தொகை பணம் வரவு வைக்கப்பட்டதும் அடுத்த சில நிமிடங்களில் ரூ.50 ஆயிரம் பணம் வேறு ஒரு வங்கி கணக்குக்கு சென்றுவிட்டது.

இதை குறுஞ்செய்தி மூலம் பார்த்து அதிர்ச்சி யடைந்த பிரபு வங்கிக்குச் சென்று விசாரித்த போது ‘நீங்கள் ரூ.80 ஆயிரம் கடன் வாங்கியுள்ளீர்கள். அதில், ரூ.50 ஆயிரம் பணத்தை வேறு வங்கிக்கு மாற்றியுள்ளீர்கள்’ என தெரிவித்துள்ளனர்.

அப்போது தான், மர்ம நபர்கள் தனது வங்கிக் கணக்கு விவரங்களை மோசடியாக பெற்று கடன் கோரி அவர்களே விண்ணப்பித்து பணத்தை திருடியிருப்பதை தெரிந்து கொண்டார்.

இது தொடர்பாக வேலூர் மாவட்ட சைபர் குற்றப்பிரிவில் பிரபு அளித்த புகாரின் பேரில் ஆய்வாளர் அபர்ணா வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை செய்து வருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்