வேலூரில் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் கோட்டை அகழியில் வரலாறு காணாத அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக, கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் தேங்கியுள்ள தண்ணீர் வெளியேற வழியில்லாமல் உள்ளது. ஒரு வாரத்துக்கு மேலாக கோயில் முழுவதும் தேங்கியுள்ள தண்ணீர் துர்நாற்றம் வீச ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக, கோயிலுக்குள் சுவாமி தரிசனம் தடை செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், வேலூர் கோட்டை அகழியில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற முடியாமல் உள்ளனர். கோட்டை அகழியில் இருந்து உபரி நீர் வெளியேறுவதற் காக ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் கால்வாய் அமைத்துள்ள னர். இந்த கால்வாய் கோட்டை அகழி கரையில் இருந்து புதிய மீன் மார்க் கெட் அருகில் உள்ள கால்வாயுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த உபரி நீர் வெளியேறும் கால்வாய் பராமரிப்பு இல்லாமல் தூர்ந்து போனதால் எத்தனை அடி ஆழத்தில் கால்வாய் அமைந் துள்ளது என்பதை கண்டறிய முடியாமல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக கால் வாயை கண்டறியும் முயற்சி பலனளிக்கவில்லை.
இந்நிலையில், வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் முன்னிலையில் கோட்டை அகழி பகுதியில் நவீன கேமராக்கள் உதவியுடன் கால்வாய் கண்டறிய முயன்றனர். ஆனால், அதில் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இதையடுத்து, மீன் மார்க்கெட் அருகே நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் சுமார் 10 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டினர்.
அதேபோல், கோட்டை அகழி பகுதியில் உள்ள உபரி நீர் வெளியேறும் பகுதியில் குழாய் மூலம் அதிக அழுத்தம் கொண்ட காற்றை செலுத்தி தூர்ந்துபோன கால்வாய் பகுதியை கண்டறிய முயன்றனர். இந்த இரண்டு முயற்சியும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, மீன் மார்க்கெட் அருகே உள்ள கால்வாய் பகுதியில்இன்று கூடுதல் ஆழத்துக்கு தோண் டிப்பார்க்க திட்டமிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக அதிகாரிகள் மட்டத்தில் விசாரித்தபோது, ‘‘கோட்டை அகழியில் உள்ள உபரி நீர் வெளியேறும் கால்வாய் தண்ணீரில் மூழ்கியுள்ளது. அது எத்தனை அடி ஆழத்தில் இருக்கிறது என்பதை தேசிய பேரிடர் மீட்டுப் படையில் ஆழ் நீச்சல் பயிற்சி பெற்ற வீரர்கள் உதவியுடன் துல்லியமாக கண்டறிந்து தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கலாம். மாவட்ட ஆட்சியர் கோரிக்கை வைத்தால் பேரிடர் மீட்புப்படையினர் இந்த பணியில் ஈடுபட அதிகம் வாய்ப்புள்ளது’’ என தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago