டிசம்பர் மாதத்துக்கான நூல் விலையில் ரூ.10-ஐ குறைத்து நிர்ணயம் : உயர்த்தப்பட்ட முழுத்தொகையையும் குறைக்க எதிர்பார்ப்பு

By செய்திப்பிரிவு

டிசம்பர் மாதத்துக்கான நூல் விலை நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் அனைத்து ரகங்களுக்கும் ரூ.10 மட்டுமே குறைக்கப்பட்டதால் தொழில் துறையினர் ஏமாற்றம் அடைந்தனர்.

வரும் ஜனவரி மாதம் வரை தொடர்ச்சியாக பண்டிகைகள் வருவதால், திருப்பூர் உள்நாட்டுக்கான பின்னலாடை தயாரிப்பு நிறுவனங்களுக்கு வெளிமாநிலங்களில் இருந்தும், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் இருந்தும் அதிகளவிலான ஆர்டர்கள் வந்து கொண்டிருக்கின்றன. நூற்பாலைகளை பொருத்தவரை, பஞ்சு விலையை அடிப்படையாகக் கொண்டு மாதம்தோறும் 1-ம் தேதியன்று நூல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. கடந்த நவம்பர் மாதம் அனைத்து ரக நூல்களின் விலையையும் ரூ.50 உயர்த்தியதால், அதிர்ச்சியடைந்த தொழில்துறையினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில் இம்மாதம் ரூ.10-ஐ மட்டும் குறைத்து நூல் விலையை நூற்பாலைகள் அறிவித்துள்ளன.

இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் முத்துரத்தினம் கூறும்போது, ‘‘கடந்த ஓராண்டில் மட்டும் நூல் விலை ரூ. 100 உயர்ந்துள்ளது.

நவம்பர் மாதத்தில் மட்டும் தடாலடியாக அனைத்து ரகங் களுக்கும் ரூ.50 விலை உயர்ந்தது, அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இம்மாதம் ரூ.10 மட்டும் குறைத்து நூல்விலை அறிவிக்கப்பட்டுள்ளது. இது, கண் துடைப்பு நடவடிக்கை. நவம்பர் மாதம் உயர்த்தப்பட்ட ரூ.50 விலையை முழுவதும் குறைக்க வேண்டும்,’’ என்றார்.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்முகம் கூறும்போது, ‘‘ஜாப் ஒர்க் நிறுவனங்கள் மற்றும் சாய ஆலைகள், 40 சதவீதம் வரை விலை உயர்த்தியுள்ளதால், தொழில்துறையினர் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே நூல்விலையை மட்டுமின்றி, மேற்காணும் விலைகளையும் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்.

நூல் விலை (கிலோவுக்கு) விவரம்: 20-ம் நம்பர் கோம்டு ரக நூல் (வரி நீங்கலாக) ரூ.295, 24-ம் நம்பர் ரூ. 305, 30-ம் நம்பர் ரூ. 315, 34-ம் நம்பர் ரூ.335, 40-ம் நம்பர் ரூ. 355, 20-ம் நம்பர் செமிகோம்டு ரக நூல் ரூ. 285, 24-ம் நம்பர் ரூ. 295, 30-ம் நம்பர் ரூ.305, 34-ம் நம்பர் ரூ. 325, 40-ம் நம்பர் ரூ. 345 என இம்மாதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்