திருமூர்த்தி அணை முழு கொள்ளளவை எட்டியதால், 25 ஆண்டுகளுக்குப் பின் பாலாற்றில் நேற்று உபரி நீர் திறக்கப்பட்டது.
பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத் திட்டத்திலுள்ள தொகுப்பணைகளில் ஒன்று உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணை. இதன் மூலமாக கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு உட்பட்ட சுமார் 3.77 லட்சம் ஏக்கர் பயன்பெறுகிறது. 60 அடி உயரம் கொண்ட அணையின் நீர் கொள்ளளவு 1.9 டிஎம்சி. தொகுப்பணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் வழியாக வரும் நீர், திருமூர்த்தி அணையில் சேகரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. இதன் மற்றொரு முக்கிய நீராதாரம் பஞ்சலிங்க அருவி. மழைக்காலங்களில் இந்த அருவியில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு, அணையின் நீர்மட்டத்தை அதிகரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
இந்நிலையில், அணையின் நீர்மட்டம் அதிகரித்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று பாலாற்றில் உபரி நீர் திறக்கப்பட்டது. பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் உபரி நீர் திறப்பதை அறிந்த விவசாயிகள், பொதுமக்கள் அணைப் பகுதியில் திரண்டனர். சிலர் பாலாற்றின் மதகுகள் அமைக்கப்பட்டுள்ள கட்டிடத்தின் மேல் தளத்தில் திரண்டு புகைப்படம், வீடியோ எடுத்து மகிழ்ந்தனர்.
இதுகுறித்து திருமூர்த்தி அணை செயற்பொறியாளர் கோபி, 'இந்து தமிழ் திசை' செய்தியாளரிடம் கூறும்போது, "1997-ம் ஆண்டுக்குப் பின், 25 ஆண்டுகள் கழித்து தற்போது தான் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. பாதுகாப்பு கருதி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி, காண்டூர் கால்வாய் மூலமாக அணைக்கு விநாடிக்கு 768 கன அடி, பஞ்சலிங்க அருவி மூலமாக 376 கன அடி என மொத்தம் 1,145 கன அடி நீர் வரத்து இருந்தது.
அணையின் நீர்மட்டம் 58 அடியாக உயர்ந்தது. பாசனத்துக்காக பிரதான கால்வாய் மூலமாக விநாடிக்கு 868 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. உபரி நீராக விநாடிக்கு 150 கன அடி வீதம் பாலாற்றில் திறக்கப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி அணைப் பகுதியில் 37 மி.மீ. மழைப் பதிவானது. அணை நிலவரம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பாலாற்றின் கரையோர மக்களுக்கு, ஏற்கெனவே வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
பட விளக்கம்
திருமூர்த்தி அணையில் இருந்து நேற்று பாலாற்றில் திறக்கப்பட்ட உபரி நீர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago