ஒமைக்ரான் வைரஸ் கண்காணிப்பு பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது என்று, நீலகிரி மாவட்ட ஆட்சியர் ச.பா.அம்ரித் தெரிவித்தார்.
'மக்களை தேடி மக்களின் அரசு' திட்டத்தின் கீழ், நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்த காந்தல் பகுதியில் மக்களின் மனுக்களை பெறும் முகாம், மாவட்ட ஆட்சியர் ச.பா.அம்ரித் தலைமையில் நேற்று நடைபெற்றது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர்.
பின்னர் ஆட்சியர் கூறும்போது, "நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளில் 41 இடங்களில் 'மக்களை தேடி மக்களின் அரசு' முகாம்கள் இன்று (நேற்று) நடத்தப்பட்டன. இந்த முகாம்களில் பட்டா, வீடு, அடிப்படை வசதிகள், குடும்ப அட்டை, ஓய்வூதியம் தொடர்பான கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனர். இந்த மனுக்கள் மீது 3 முதல் 5 நாட்களில் தீர்வு ஏற்படுத்தப்படும். பயனாளிகளுக்கு வனத்துறை அமைச்சர் மூலமாக பலன்கள் வழங்கப்படும்.
வீடுகள் கோருபவர்களுக்கு, தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் மூலமாக கட்டப்பட்டுவரும் வீடுகள் ஒதுக்கப்படும். பட்டா நிலம் இருந்தால், அரசு சலுகைகளுடன் வீடு கட்டி கொடுக்கப்படும்.
நீலகிரி மாவட்டத்தில் ஒமைக்ரான் வைரஸ் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன" என்றார்.
மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, உதகை கோட்டாட்சியர் துரைசாமி, நகராட்சி ஆணையர் காந்திராஜன் உட்பட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
பட விளக்கம்
உதகையில் நடைபெற்ற 'மக்களை தேடி மக்களின் அரசு' திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் ச.பா.அம்ரித்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago