ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு,நீலகிரி மாவட்டத்தில் இருந்து கேரளா மாநிலத்துக்கு நேற்றுமுதல் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன.
கேரளா, கர்நாடகா மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளது. நீலகிரி மாவட்டம். இதனால், நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் அண்டை மாநிலங்களில் இருந்து வந்து செல்கின்றனர். அதேபோல, எல்லையோர கிராமங்களைச் சேர்ந்த பலரும் கேரளாமாநிலத்துக்கு பல்வேறு பணிகளுக்காக சென்று வருகின்றனர். கரோனா தொற்று பரவலையடுத்து, கடந்த ஆண்டு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதி லிருந்து, பொதுப்போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் உதகையிலிருந்து கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கான அரசு பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டது.
கரோனா பாதிப்பு குறைந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் கர்நாடகா மாநிலத்துக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால், கேரளாவுக்குபேருந்து சேவை தொடங்கப்படவில்லை. இதனால், நீலகிரி மாவட்டத்தில் இருந்து கேரளா செல்லும் பயணிகள், மாநில எல்லை வரை தனியார் வாகனங்களில் சென்று, அங்கிருந்து அம்மாநில அரசு பேருந்துகள் மூலமாக தங்களது ஊர்களுக்கு சென்று வந்தனர்.
இந்நிலையில், கரோனா ஊரடங்கில் தளர்வு அளித்து கேரளாவுக்கு அரசு பேருந்துகள் இயக்கலாம் என தமிழக அரசு அறிவித்ததையடுத்து, நேற்று காலை முதல் உதகையிலிருந்து அரசு பேருந்து சேவை தொடங்கப்பட்டது. உதகையில் இருந்து கண்ணனூர், கள்ளிக்கோட்டை, சுல்தான் பத்தேரி, பாலக்காடு ஆகிய பகுதிகளுக்கு நேற்று அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகுபோக்குவரத்து தொடங்கிய நிலையில், இரண்டு மாநில பயணிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago