பணியில் குறைபாடு இருப்பதாகக்கூறி தஞ்சாவூர் சரக - கூட்டுறவு துணைப் பதிவாளர் இடமாற்றம் :

By செய்திப்பிரிவு

பணியில் குறைபாடு இருப்பதாகக்கூறி, தஞ்சாவூர் சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் குன்னூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளராக எஸ்.குமாரசுந்தரம்(56) பணியாற்றி வந்தார். இந்நிலையில், பணியில் குறைபாடு இருப்பதாகவும், நிர்வாக காரணங்களுக்காகவும் நீலகிரி மாவட்டம் குன்னூர் கூட்டுறவு நகர வங்கி மேலாண்மை இயக்குநராக இவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நஜிமுதீன், நேற்று முன்தினம் பணியிடமாறுதல் ஆணையை குமாரசுந்தரத்துக்கு அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து கூட்டுறவு சங்க அலுவலர்கள் கூறும்போது, ‘‘குமாரசுந்தரம். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தஞ்சாவூர் சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் தஞ்சாவூர் கூட்டுறவு நுகர்வோர் மொத்த விற்பனை பண்டகசாலையின் தலைவராக உள்ள பண்டரிநாதன், அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் சேர்ந்தார். இந்த பண்டகசாலையின் 21 இயக்குநர்களில் 16 பேர் அதிமுகவைச் சேர்ந்தவர்கள், 5 பேர் மட்டுமே திமுகவைச் சேர்ந்தவர்கள்.

பண்டகசாலை தலைவரான பண்டரிநாதன் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி, அதிமுகவைச் சேர்ந்த இயக்குநர்கள் அக்.25-ம் தேதி தஞ்சாவூர் மண்டல இணைப் பதிவாளர் மற்றும் துணைப் பதிவாளரிடம், தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும், அவரை மாற்ற வேண்டும் என கையெழுத்திட்டு மனு வழங்கினர்.

கூட்டுறவு சங்கங்களின் விதிப்படி 30 தினங்களுக்குள் அதற்கான பதிலை வழங்க வேண்டும் என்பதால், துணைப் பதிவாளரான குமாரசுந்தரம், நவ.22-ம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான சிறப்புக் கூட்டம் நடத்துமாறு கூறி, சரக கூட்டுறவு சார் பதிவாளர் ஜெயசுதாவை தனி அதிகாரியாக நியமித்தார்.

ஆனால், அன்றைய தினம் சிறப்புக் கூட்டத்தை நடத்த ஜெயசுதா வரவில்லை. ஆனால், அதிமுக இயக்குநர்கள் மட்டும் கலந்துகொண்டு தாங்களாகவே கூட்டத்தை நடத்தினர். மேலும், ஜெயசுதாவை கண்டித்து அதிமுகவினர் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்தநிலையில், துணைப்பதிவாளர் குமாரசுந்தரத்தை குன்னூருக்கு கூட்டுறவு நகர வங்கி மேலாண்மை இயக்குநராக இடமாறுதல் செய்துள்ளனர். இது கூட்டுறவு சங்க அதிகாரிகள், பணியாளர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்