கடலாடி அருகே டாஸ்மாக் ஊழியரை கத்தியால் தாக்கிவிட்டு ரூ.10 ஆயிரம் பணத்தை பறித்துச்சென்ற வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டத்துக்கு உட்பட்ட கீழ்பாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் (43). இவர், காஞ்சி காமராஜர் நகரில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 24-ம் தேதி கடையில் விற்பனையை முடித்து விட்டு இரவு 9 மணியளவில் வீட்டுக்கு புறப்பட தயாரானார்.
அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் 2 பேர், சரவணனின் கத்திமுனையில் பணம் பறிக்க முயன்றனர். அதைத் தடுக்க முயன்ற சரவணனை தாக்கிவிட்டு அவர் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் ரொக்கப் பணத்தை பறித்துச் சென்றனர். மர்ம நபர்கள் கத்தியால் வெட்டியதில் சரவணனின் ஆள் காட்டி விரலில் காயம் ஏற்பட்டது.
இது தொடர்பான புகாரின்பேரில் கடலாடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்ததுடன், போளூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அறிவழகன்மேற்பார்வையில் ஆய்வாளர் முரளிதரன் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தி வந்தனர். இதன் தொடர்ச்சியாக கண்காணிப்பு கேமராக்கள் காட்சிப்பதிவுகளுடன் விசாரணை நடத்தியதில் செங்கம் வட்டம் ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (24) என்பவரை கேட்டவரம்பாளையம் அருகே தனிப்படையினர் நேற்று கைது செய்தனர்.
விசாரணையில் அவர், டாஸ்மாக் ஊழியர் சரவணனை தாக்கி பணத்தை பறித்துச் சென்றதை ஒப்புக்கொண்டார். இந்த சம்பவத்தில் அவருடன் இருந்தவர் தூத்துக்குடி மாவட்டம் சேரங்குளம் கிராமத்தைச் சேர்ந்த இசக்கி பாண்டியன் (23) என்பது தெரியவந்தது. மேலும், இசக்கி பாண்டியன் ஏற்கெனவே வழிப்பறி வழக்கில் கோவை மாநகரம் சரவணம்பட்டி காவல் நிலைய போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதையும் அவர் கூறியுள்ளார். இவர்கள் இருவரும் கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் டாஸ்மாக் மதுபானக் கடை ஊழியர்களை குறிவைத்து பணத்தை வழிப்பறி செய்த வழக்குகள் பல நிலுவையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட மணிகண்டனிடம் இருந்து ரூ.10 ஆயிரம் பணம் மற்றும் இரு சக்கர வானம் ஒன்றையும் கடலாடி காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago