இன்னோவேடிவ் டீச்சர்ஸ் டீம் சார்பில் இணையவழியில் நடத்தப்படும் தேசிய திறனாய்வு தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்க வேண்டும் என பள்ளிக்கல்வி ஆணையரக இணை இயக்குநர் ஜெயகுமார் அறிவுறுத்தினார்.
தேசிய வருவாய் வழி திறனறிவுத் தேர்வுக்கான இணைய வழி பயிற்சி வகுப்புகள் திருப்பத்தூர் மாவட்டத்தில் "இன்னோவேடிவ் டீச்சர்ஸ் டீம்" சார்பில் கடந்த சில மாதங்களாக நடத்தப்பட்டு வருகிறது.
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்காக மத்திய அரசு வழங்கும் “தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை” திட்டத்தின் கீழ் திறனறிவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் இணைய வழியில் திருப்பத்தூர் மாவட்டத்தில் தினசரி மாலை 6 மணி முதல் 7 மணி வரை நடத்தப்பட்டு வருகிறது.
இதில், 8-ம் வகுப்பு அறிவியல், சமூக அறிவியல், கணிதம் தொடர்பான பாடத்திட்டங்களுக்கான வகுப்புகள், மனத்திறன் தேர்வு மற்றும் படிப்புத்திறன் தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு தேவையான ஆலோசனைகள் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
இணைய வழி பயிற்சியில் மாணவர்களுக்கான போட்டித் தேர்வு எழுதுவது எப்படி? அதற்கான முறையான பயிற்சி அளிப்பது எப்படி? கடின உழைப்பினால் மனத்திறன் தேர்வை (MAT) எளிதாக எதிர்கொள்ளவது குறித்து இணையவழியிலான பயிற்சி திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்றது.
இதில், பள்ளிக்கல்வி ஆணையரக இணை இயக்குநர் ஜெயகுமார் கலந்துக்கொண்டு பேசும் போது, ‘‘தேசிய திறனாய்வு தேர்வில் மாணவர்கள் கலந்து கொள்ள வேண்டும். மனத்திறன் தேர்வில் எண் தொடர்கள், எழுத்து தொடர்கள், ஆங்கில அகராதிப்படி எழுத்துக்களை வரிசைப்படுத்துதல், தனித்த எண்ணை கண்டறிதல், வெண் படங்கள், ஒத்த உருவங்கள், கண்ணாடி பிம்பங்கள், குறியிடல், சிந்தனை கேள்விகள், கனசதுரம் அமைத்தல், வார்த்தை அமைப்பு, கணித முறை, நுண்ணறிவுத்திறன் ஆகியவற்றை மாணவர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
மேலும்,கேள்விகள் அமைப்பு, பதில் அளிக்கும் கூறுகள் குறித்து ஆசிரியர்கள் மூலம் இணைய வழியில் பயற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இத்தேர்வு மூலம் மாணவர்கள் விரிசிந்தனை, சிக்கலுக்கு தீர்வு காணும் ஆற்றல், பகுத்தறிவும் திறன் மேம்படுவதால் அவர்களின் வாழ்வியல் சிக்கலுக்கு ஆராய்ந்து தீர்வு காணும் திறமையும் உருவாகிறது.
இத்தேர்வுகள் மூலம் மாணவர் கள் வரும் காலத்தில் எழுதவுள்ள பல்வேறு போட்டித் தேர்வு களுக்கு (RTSE, NTSE, SSC, TNPSC, RRB, UPSC, etc.) இது ஒரு அடிப்படையாகவும், தூண்டுகோலாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை.
இதில், வெற்றிபெற்றால் அரசு சார்பில் வழங்கப்படும் கல்வி உதவித் தொகை பெற மாணவர்களுக்கு வாய்ப்பு ஏற்படும். எனவே, தேர்வில் வெற்றி பெரும் மாணவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை நான்கு ஆண்டுகளுக்கு மாதம்ரூ.1,000 வழங்கப்படுகிறது. இதை, மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இப்பயிற்சி மூலம் இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர் என்பது பாராட்டுக்குரியது. மேலும், தமிழகம் முழுவதிலும் உள்ள ஆசிரியர்களை ஒன்று சேர்த்து மாணவர்களுக்கு பயிற்சி வழங்கி வருவது பாராட்டுக்குரியது’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில், ஆம்பூர் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சரவணன், அருண்குமார், காளிதாஸ், ஜெயசீலன், ராமநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதிலும் உள்ள ஆசிரியர்களை ஒன்று சேர்த்து மாணவர்களுக்கு பயிற்சி வழங்கி வருவது பாராட்டுக்குரியது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago