நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக உதகை, குந்தா, கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடைவிடாது தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக உதகை, லவ்டேல், கோத்தகிரி என 10-க்கும் மேற்பட்ட இடங்களில்ராட்சத மரங்கள் சாலைகளின் குறுக்கேயும், மின் கம்பங்களின்மீதும் விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, மலைக் கிராமங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.
மாவட்டத்தின் பல பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் காணப்பட்டதால் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். கன மழை காரணமாக நேற்று மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
‘மழையின் பாதிப்புகள் குறைவாகவே உள்ளன. காற்றின்வேகம் அதிகமாக உள்ளதால், மரங்கள் சாய்ந்துள்ளன. நிவாரண முகாம்கள் தயாராக வைக்கப் பட்டுள்ளன’ என மாவட்ட ஆட்சியர்ச.பா.அம்ரித் தெரிவித்தார்.
இந்நிலையில், மைனலா பகுதியில் மரம் விழுந்ததில் பழுதான மின்மாற்றியை சீரமைக்கும் பணியையும், தும்மனட்டி பட்டர்கம்பை மற்றும் மொரக்குட்டி முத்துசாமி நகர் ஆகிய பகுதிகளில் சேதமடைந்த வீடுகளையும் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேற்று ஆய்வு செய்தார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய பின்பு அமைச்சர் கூறும்போது, ‘‘நீலகிரி மாவட்டத்தில் 9 இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. அதனை அகற்றும் பணி நடைபெற்றுவருகிறது. தும்மனட்டி, எப்பநாடு மற்றும் உலிக்கல் ஆகிய பகுதிகளில் சில வீடுகள் சேதமடைந்துள்ளன. அவர்களுக்கு தேவையான நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.பழுதான மின்மாற்றியை உடனடியாக சீரமைத்து தடையின்றி மின்விநியோகம் கிடைக்கஅலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,’’ என்றார்.
மாவட்டத்தில் நேற்று மாலை 4 மணி நிலவரப்படி குந்தாவில் 23, பர்லியாறில் 19, கோத்தகிரியில் 18, அவலாஞ்சியில் 17, குன்னூரில் 16.2, கெத்தையில் 14, உதகையில் 13, கீழ் கோத்தகிரியில் 10 மி.மீ. மழை பதிவானது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago