அமராவதி ஆற்றில் இருந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு - வட்டமலைக்கரை ஓடை அணைக்கு தண்ணீர் திறப்பு :

By ச.மணிகண்டன்

திருப்பூர் மாவட்டம் காங்கயம் வட்டம் வெள்ளகோவிலை அடுத்தஉத்தமபாளையத்தில் வட்டமலைக்கரை ஓடை அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மூலம் 6,043 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பிஏபி உபரிநீர், செஞ்சேரிமலை, பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழைநீர், பிஏபி பாசனத்தில் கிடைக்கும் கசிவுநீரால் அணைக்கு நீர்வரத்து கிடைக்கும். இந்த அணை நீரால், வலது மற்றும்இடது வாய்க்கால்கள் மூலமாக 7 ஊராட்சிப் பகுதிகள், 60 குக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயன்பெறுவர். கடந்த 17 ஆண்டுகளுக்குப் பிறகு நவம்பர், 28-ம் தேதி கல்லிப்பாளையம் ஷட்டரில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

இதுதொடர்பாக வட்டமலை ஓடைக்கரை அணை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் செ.கந்தசாமி கூறும்போது, ‘‘வட்டமலைக்கரை ஓடை அணை செயல்பாட்டுக்கு வந்தது முதல் தற்போது வரையிலான 41 ஆண்டுகளில், 30 ஆண்டுகள் தண்ணீரில்லாமல், அணை வறண்ட நிலையிலேயே காணப்பட்டது. திருமூர்த்தி அணையில் இருந்து 84-வது கி.மீ.யில் உள்ள கல்லிப்பாளையம் என்ற இடத்தில் இருந்துதான், 1991, 1994 மற்றும் 1998 முதல் 2004-ம் ஆண்டுகளில் அமராவதி ஆற்று தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த ஷட்டர், 2010 முதல் 2020-ம் ஆண்டு வரை கான்கிரீட் கலவை மூலமாக பொதுப்பணித் துறையினரால் அடைக்கப்பட்டிருந்தது. தற்போது பிஏபி மண்டல பாசனப் பரப்பு, வட்டமலைக்கரை ஓடை அணை - கல்லிப்பாளையம் இடையிலான 40 கி.மீ.க்குள் தடுப்பணைகள் அதிகரித்துள்ளன. ஆயக்கட்டு பகுதிகள் அதிகமானதால், பிஏபி கசிவுநீர்கூட கிடைக்காமல், வட்டமலைக்கரை ஓடை அணையை சார்ந்துள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பிஏபி அணையில் இருந்து ஆண்டுக்கு குறைந்தது 5 நாட்களாவது உயிர் நீர்விட வேண்டும்,’’ என்றார்.

பராமரிப்பின்றி அணை

வட்டமலைக்கரை ஓடை அணை பாசன விவசாயிகள் நலச் சங்கத் தலைவர் க.பழனிசாமி கூறும்போது, ‘‘போதிய நீர் வரத்து இல்லாமல் இருந்ததால், அணை பராமரிப்பின்றி உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், 1984-ம் அரசாணைப்படி அமராவதி ஆற்றில் இருந்து தாராபுரம் உப்பாறு அணைக்கு தண்ணீர் கொண்டு வந்து, அங்கிருந்து வாய்க்கால் வெட்டி வட்டமலைக்கரை ஓடை அணைக்கு நீரைக்கொண்டு வர வேண்டும். காண்டூர் கால்வாயில் இருந்து 1,100 கன அடி தண்ணீர் எடுக்க வேண்டிய நிலையில், 800 கன அடி மட்டுமே எடுக்கப்படுகிறது. மீதமுள்ள 300 கன அடி தண்ணீரையும் எடுக்க வேண்டும்,’’ என்றார்.

முதல்கட்ட ஆய்வில் திட்டப் பணி

இதுதொடர்பாக நீர்வள ஆதாரத் துறையின் திட்டம், வடிவம் (ஈரோடு கோட்டம்) செயற்பொறியாளர் கே.எம்.விஜயாவிடம் கேட்டபோது, ‘‘புவிஈர்ப்பு விசை மூலமாக வட்டமலைக்கரை ஓடை அணைக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டம் தொடர்பான முதல் நிலை திட்ட அறிக்கை அரசின் கவனத்தில் உள்ளது. மேலும், பம்பிங் மூலமாக கொண்டு செல்லும் திட்டமும் முதல்கட்ட ஆய்வில் உள்ளது,’’ என்றார். இன்று (டிச.1) அதிகாலை வட்டமலைக்கரை ஓடையை உயிர் நீர் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுவதால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்