தஞ்சாவூர் மாவட்டத்தில் சுகாதார ஆய்வாளர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் :

By செய்திப்பிரிவு

சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட சுகாதார ஆய்வாளர்களை கைது செய்ததை கண்டித்தும், அவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரியும் தஞ்சாவூர் மாவட்டத்தில் சுகாதார ஆய்வாளர்கள் நேற்று பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் சென்னையில் 1,646 சுகாதார ஆய்வாளர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார், பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல், கைது செய்து சிறையில் அடைத்தனர். இதைக் கண்டிக்கும் விதமாக நேற்று மாநிலம் முழுவதும் சுகாதார ஆய்வாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார ஆய்வாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு, பொது சுகாதாரத்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் இளங்கோவன் தலைமை வகித்தார். சுகாதார ஆய்வாளர் சங்கங்களின் மாவட்டச் செயலாளர் சுதாகர், கூட்டமைப்பின் செயலாளர் மு.சிங்காரவேல், மருந்தாளுநர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பாஸ்கரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 168 சுகாதார ஆய்வாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் நேற்று அனைவரும் ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து, பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால், மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி, கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி உள்ளிட்ட பொது சுகாதாரப் பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்