திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி யில், நடப்பாண்டில் மாணவர் சேர்க்கைக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ள நிலையில், இக்கல்லூரிக்கு சென்னை எம்.ஜி. ஆர். பல்கலைக்கழகம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
திருப்பூர் தாராபுரம் சாலையில் ரூ.340 கோடி மதிப்பில் 12 ஏக்கரில் நடைபெற்று வந்த மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகள், தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.
இப்பணிகளையும், மருத்துவக் கல்லூரி வகுப்பறை கட்டிடம், ஆய்வகம், மாணவ, மாணவிகள் விடுதி உள்ளிட்டவற்றையும் சென்னை எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ அலுவலர்கள் ஆய்வு செய்து, அங்கீகாரம் அளித்துள்ளனர்.
இதுகுறித்து திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் முருகேசன் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘நடப்பாண்டில் நீட் தேர்வில், தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியானதும், மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும்,’’ என்றார்.
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அலுவலர்கள் கூறும்போது, ‘‘உடற்கூராய்வு, உயிர் வேதியியல் மற்றும் உடல் இயக்கியல் உட்பட 25 துறைகள் மருத்துவக் கல்லூரியில் உள்ளன. பேராசிரியர்கள் 2 பேர், இணை பேராசிரியர்கள் 12 பேர், உதவி பேராசிரியர்கள் 28 பேர், முதுநிலை உள்ளிருப்பு மருத்துவர் 19 பேர், இளநிலை உள்ளிருப்பு மருத்துவர் 27 பேர், ஆசிரியர்கள் 14 மற்றும் உதவி அறுவை சிகிச்சையாளர் 40 பேர் என மொத்தம் 146 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர, அலுவலகப் பணிக்கு இளநிலை உதவியாளர், அலுவலக ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் என பலர் நியமிக்கப்பட்டுள்ளனர்,’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago