திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம், ஆட்சியர் சு.வினீத் தலைமையில் நேற்று நடந்தது. இதில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர்.
திருப்பூர் மாவட்ட மீன் வியாபாரிகள் நலச்சங்கத்தினர் அளித்த மனுவில், ‘தென்னம்பாளையம் மொத்த மீன் வியாபாரிகள் மொத்தமாகவும், சில்லரையாகவும் ஒரே இடத்தில் வைத்து மீனை விற்பனை செய்து வருகின்றனர். இதனால் சில்லரை வியாபாரிகளின், விற்பனையும் பாதிக்கப்படுகிறது. எனவே சில்லரை வியாபாரத்தை தனியாக செய்ய வேண்டும் என மொத்த வியாபாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளனர்.
அவிநாசி வட்டம் செல்வபுரம் ஏடி காலனி பொதுமக்கள் அளித்த மனுவில் ‘எங்கள் பகுதியில் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ், கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் பழுதடைந்து மேற்கூரைகள் பெயர்ந்து விழும் நிலையில் உள்ளன. இதை, பழுது பார்க்க போர்க்கால அடிப்படையில் உதவ வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளனர். மனுக்களை பெற்றுக் கொண்ட ஆட்சியர், துறை ரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிட்டார்.
திருப்பூர் நாதம்பாளையம் கணக்கம்பாளையத்தை சேர்ந்தவர் நாககுமார் (50) என்பவர், திருப்பூர் வடக்கு தொகுதி எம்எல்ஏ விஜயகுமாருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வாசகங்கள் அடங்கிய பதாகையை ஏந்தியவாறு மனு அளிக்க வந்தார். அவரை பிடித்து வீரபாண்டி போலீஸார் விசாரித்ததில், ‘தான் குடியிருந்து வரும் வீட்டில் நடைபெற்ற திருட்டு சம்பவம் தொடர்பாக வீட்டின் உரிமையாளர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் வீட்டின் உரிமையாளரை கைது செய்யவிடாமல் எம்எல்ஏ தடுப்பதாகவும், அதனாலேயே அவருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பதாகை ஏந்தி வந்ததாகவும், நாககுமார் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago