நட்சத்திரக் கல் தருவதாகக் கூறி தஞ்சாவூர் ஓட்டல் உரிமையாளரிடம் ரூ.3.50 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டம் வெள்ளம்பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மருது பாண்டியன் (43). ஓட்டல் உரிமையாளர். இவரை, திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கரியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த முத்து (39) என்பவர் தொடர்பு கொண்டு, தன்னிடம் அதிக மதிப்புள்ள நட்சத்திரக் கல் (சுலைமான் கல்) உள்ளது எனத் தெரிவித்தார். இதற்காக ரூ.3.50 லட்சம் தர வேண்டும் என முத்து கூறினார். இதற்கு மருதுபாண்டியன் சம்மதம் தெரிவித்தார்.
இதையடுத்து கடந்த 27-ம் தேதி, மருதுபாண்டியனும், முத் துவும் கிருஷ்ணகிரிக்கு வந்து, இங்குள்ள தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கினர். அறைக்கு முத்துவின் நண்பர், திருப்பத்தூர் மாவட்டம் மேட்டுகாலனியைச் சேர்ந்த செந்தில் (33) என்பவர் வந்தார். அப்போது நட்சத்திரக் கல், பெங்களூரு பி.தாசிரிப்பள்ளியைச் சேர்ந்த ராஜேஷ், சந்திரசேகரிடம் உள்ள தாகக் கூறி, மருது பாண்டியனை காரில் முத்து, செந்தில் ஆகியோர் வேப்பனப்பள்ளி சாலைக்கு அழைத்துச் சென்றனர்.
தப்பியோட்டம்
நடுப்பட்டி இணைப்புச் சாலைக்கு வந்த ராஜேஷ், சந்திரசேகர் காரில் இருந்தபடியே மருதுபாண்டியனிடம் ரூ.3.50 லட்சத்தைப் பெற்றுக் கொண்டனர். ஆனால் நட்சத்திரக் கல் கொடுக்கவில்லை.சிறிது நேரத்தில் ராஜேஷ், சந்திரசேகர் காரில் தப்பிச் சென்றனர். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மருதுபாண்டியன், இதுதொடர்பாக கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் முத்து, செந்தில் ஆகியோரைக் கைது செய்து, அவர்களிடமிருந்து காரை பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள ராஜேஷ், சந்திரசேகர் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago