பேரிடர் மேலாண்மை திட்டத்தில் இடுபொருள் இழப்பீடு - ரூ. 20 ஆயிரத்தை ரூ. 6,030 ஆக குறைப்பதா? : புதுச்சத்திரத்தில் மழை சேதங்களைப் பார்வையிட்ட பி.ஆர்.பாண்டியன் கண்டனம்

By செய்திப்பிரிவு

பேரிடர் மேலாண்மை திட்டத்தில் இடுபொருள் இழப்பீடு ரூ.20 ஆயிரத்தை ரூ.6,030 ஆக குறைத்திருப்பதற்கு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர்.பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நேற்று மாலை கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள மணிக்கொல்லை கிராமத்தில் மழை, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை குமரி முதல் சென்னை வரையிலும் வரலாறு காணாத வகையில் பெய்து வருகிறது.இதனால் பெரும்பகுதியான மாவட்டங்களில் சம்பா, தாளடி பயிர்கள் ஒரு மாதத்திற்கு மேல் தண்ணீரில் மூழ்கி அழுகி வருகிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மறு கணக்கெடுப்பு நடத்தி ஏற்கெனவே மத்திய அரசு இடுபொருள் இழப்பீடாக பேரிடர் மேலாண்மை திட்டத்தில் ரூ. 20 ஆயிரம் அனுமதிக்கப்பட்டு தமிழக அரசால் வழங்கப்பட்டு வருவதை ரூ. 6,030 ஆக குறைந்து இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்து தற்போதைய விலை வாசி உயர்வை கணக்கில்கொண்டு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ. 25 ஆயிரம் உயர்த்தி இடுபொருள் இழப்பீடாக சம்பா தாளடி பயிர்களுக்கு வழங்கிட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

கடலூர் மாவட்டம் மணிக்கொல்லையை சுற்றி இருக்கிற 20 கிராமங்கள் பரவனாறு வடிகால் கடல் முகத்துவார பகுதியில் அமைந்துள்ளன.

இப்பகுதியில் அருவாமூக்குத் திட்டம் கிடப்பில் உள்ளதால் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படுகிற தண்ணீரும்,வெள்ள நீரும் கலந்து இந்த கிராமங்களில் ஆண்டுதோறும் முழுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.

மேலும் பரவனாறு கரையை ஒட்டி இருக்கிற பகுதிகளில் சட்டவிரோதமாக இறால் பண்ணைகள் அமைக்கப்பட்டு வெள்ளநீர் தடை ஏற்பட்டுள்ளதால் மிகப்பெரும் இழப்பை சந்தித்துள்ளனர்.

எனவே உடனடியாக அவசரகால நடவடிக்கை எடுத்து நெய்வேலி நிலக்கரி நிறுவன பங்களிப்போடு அருவாமூக்கு திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்வர வேண்டும். சட்டவிரோதமாக பேரழிவை ஏற்படுத்தக்கூடிய இறால் பண்ணைகளை உடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2020-21 ம் ஆண்டு காப்பீடு செய்த விவசாயிகளுக்கு கடலூர் மாவட்டத்தில் 37 கிராமங்களில் இழப்பீடு அனுமதிக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.மேலும் காவிரி டெல்டா மாவட்டங்களில் 182 கிராமங்களில் ஜீரோ என கணக்கிடப்பட்டு இழப்பீடு வழங்க மறுத்துள்ளது.தற்போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் இழப்பீடு பெற்று தரவேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது எனவே உடன் நடவடிக்கை எடுத்து பெற்றுத்தர வேண்டும் என்றார்.

கடலூர் மண்டல தலைவர் வீராணம் விநாயகமூர்த்தி, மாவட்ட செயலாளர் மணிக்கொல்லை ராமச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்