சிவகங்கை மாவட்டத்தில் பல பள்ளிக் கட்டிடங்கள் சேதமடைந்த நிலையில், அதைக் கண்காணிக்க வேண்டுமென தலைமைஆசிரியர்களுக்கு நெருக்கடி கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் பல பள்ளிக் கட்டிடங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளன. இதனால் தொடர் மழையில் மேற்கூரைகள் ஒழுகி வருகின்றன. இதனால் பல இடங்களில் மாணவர்கள், ஆசிரியர்கள் அச்சத்துடன் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில் கட்டிடத்தின் உறுதித்தன்மையை கண்காணித்து, மாணவர்கள் பாதுகாப்பில் பொறுப்பேற்க வேண்டுமென கல்வித்துறை அதிகாரிகள் தலைமை ஆசிரியர்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இதற்கு தலைமை ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சிவகங்கை அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: மாவட்டத்தில் பெரும்பாலான அரசு பள்ளி கட்டிடங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளன. இதனால் மழைக்காலங்களில் மேற்கூரையில் இருந்து தண்ணீர் கசிகிறது. பல இடங்களில் மேற்கூரைகள் பெயர்ந்து விழுகின்றன.
இந்நிலையில் கட்டிடத்தின் உறுதித்தன்மையை கண்காணிக்க வற்புறுத்துகின்றனர். கட்டிடத்தின் உறுதித்தன்மையை பொதுப்பணி மற்றும் ஊரகவளர்ச்சித்துறை பொறியாளர்கள் மட்டுமே கண்டறிய முடியும். மேலும் மாணவர்கள் பாதுகாப்பில் ஏதாவது பிரச்சினை என்றால் தலைமை ஆசிரியர்கள்தான் பொறுப்பு என்கின்றனர். எங்களை நிர்பந்தம் செய்வதை விட்டுவிட்டு, பொறியாளர்கள் மூலம் ஆய்வு செய்து ஆசிரியர்களையும், மாணவர்களையும் பாதுகாக்க வேண்டும், என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago