கிருஷ்ணகிரியில் பரவலாக மழை ஊத்தங்கரையில் 4.4 மிமீ மழை பதிவு :

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பொழிவு இருந்தது.

நேற்று காலை, கிருஷ்ணகிரி, மத்தூர், ஊத்தங்கரை பகுதியில் மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி, மத்தூர் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட ஊத்தங்கரை, மத்தூர், பர்கூர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் 536 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்தார்.

கிருஷ்ணகிரி, காவேரிப் பட்டணம் பகுதியில் மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடியே பள்ளிகளுக்குச் சென்றனர். காலை 11 மணிக்குப் பிறகு மழை பெய்வது நின்றுவிட்டது.

நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) ஊத்தங்கரை 4.40, பெனுகொண்டாபுரம் 2.10, பாரூர் 1.40, கிருஷ்ணகிரி 1 மிமீ மழை பதிவாகி இருந்தது.

தென்பெண்ணை ஆற்று பகுதிகளில் மழை அளவு குறைந்ததால் நேற்று காலை கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1714 கனஅடியானது. அணையில் இருந்து ஆற்றில் 1589 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அணையில் 50.60 அடி உயரம் தண்ணீர் தேங்கி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE