தூத்துக்குடியில் 4 நாட்களாக தேங்கியுள்ள மழைநீர் :

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 25-ம் தேதி அதி கனமழை பெய்தது. இதனால் தூத்துக்குடி மாநகர பகுதிமுழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்டது. கடந்த நான்கு நாட்களாக மாவட்டத்தில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது. நேற்று பகலில் வெயில் தலைகாட்டியது. இதையடுத்து தூத்துக்குடி மாநகர பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.

தூத்துக்குடி பிரையண்ட் நகர், குறிஞ்சி நகர், முத்தம்மாள் காலனி, ராம் நகர், ரஹ்மத் நகர், தனசேகரன் நகர், கதிர்வேல் நகர் உள்ளிட்ட சில பகுதிகளில் இன்னும் மழைநீர் முழுமையாக வடியவில்லை. மாநகர பகுதி முழுவதும் 313 மோட்டார்கள் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. பல இடங்களில் சாலைகளை உடைத்தும், ராட்சத குழாய்கள் பொருத்தியும் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

ஆய்வுக் கூட்டம்

தூத்துக்குடியில் நடைபெறும் மழை வெள்ள நிவாரண பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் தலைமை வகித்தார். மாவட்ட மழை வெள்ள நிவாரண சிறப்பு அதிகாரியான தொழில் ஆணையர் மற்றும் தொழில் இயக்குநர் சிஜி தாமஸ் வைத்யன், மாவட்ட ஆட்சியர் கி. செந்தில் ராஜ், மாநகராட்சி ஆணையாளர் தி.சாரு முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அமைச்சர் பேசும்போது, “ மாநகராட்சி பகுதிகளில் நீரூற்று ஏற்படுகின்ற இடங்களில் தொடர்ந்து மின் மோட்டார்களை வைத்து தண்ணீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. வரும் நாட்களில் அதிகளவில் மழை பெய்தாலும், அந்த மழைநீரையும் எளிதில் வெளியேற்றும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொசு மருந்து அடிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காய்கறி தொகுப்பு, பலசரக்கு சாமான்கள், பால் மற்றும் மருத்துவ சேவை உள்ளிட்டவை தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

மழை அளவு

மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): திருச்செந்தூர் 28, காயல்பட்டினம் 7, குலசேகரன்பட்டினம் 29, விளாத்திகுளம் 23, காடல்குடி 5, வைப்பார் 17, சூரன்குடி 21, கோவில்பட்டி 20, கழுகுமலை 32, கயத்தாறு 12, கடம்பூர் 10, ஓட்டப்பிடாரம் 20, மணியாச்சி 15,கீழ அரசடி 8, எட்டயபுரம் 32.1,சாத்தான்குளம் 13.4, வைகுண்டம் 20.5, தூத்துக்குடியில் 6.6 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்