ஆம்பூர் அருகே வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய சென்றபோது - மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்ட பொதுமக்கள் :

By செய்திப்பிரிவு

ஆம்பூர் அருகே வெள்ள பாதிப்புபகுதிகளை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்ட பொதுமக்கள் அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட ஆரீப்நகர், பாச்சல் ஊராட்சி, என்ஜிஓ நகர், வாணியம்பாடி அரசு மருத்துவமனை, ஆம்பூர் வட்டத்துக்கு உட்பட்ட பாங்கிஷாப் உள்ளிட்ட பகுதியில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தென்காசி எஸ்.ஜவஹருடன், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா நேற்று சென்றார்.

ஆம்பூர் அடுத்த பெரியவரிக்கம் ஊராட்சிக்கு சென்றுவிட்டு திரும்பி ஆம்பூர் நோக்கி வந்தபோது துத்திப்பட்டு ஊராட்சி அம்பேத்கார் நகர் பகுதி அருகே அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், மாவட்ட ஆட்சியரின் காரை நிறுத்தி தங்களுடைய பகுதி மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளாகி ஒரு வாரத்துக்கு மேலாகிறது.

இங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. சாலைகள் சேதமடைந்து போக்குவரத்து தடைபட்டு்ளளது. பலர் வீடுகளில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.

ஆய்வுக்கு வந்த ஆம்பூர் வருவாய்த் துறையினர் உதவி செய்வதாகவும், மழைநீரை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கடந்த 19-ம் தேதி கூறிவிட்டுச் சென்றனர். ஆனால், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை. மழை வெள்ள பாதிப்பு குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாறை அறை அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கான எண்ணும் வழங்கப்பட்டது. ஆனால், அந்த எண்ணை தொடர்பு கொண்டால் எந்த பதிலும் இல்லை. சில நேரங்களில் போனை எடுப்பதே இல்லை. மழைநீர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்துள்ளதால் பாம்புகளும், விஷபூச்சிகளும் படையெடுக்கின்றன. குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளோம். குடிநீர் வசதி, உணவு வசதி இல்லாமல் தவிக்கிறோம்.

ஆய்வு நடத்த வரும் அதிகாரிகள் அதன் பிறகு என்ன செய்கிறார்கள் என்றே தெரியவில்லை எனக்கூறி ஆட்சியரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை, சமாதானம் செய்த மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தென்காசி எஸ்.ஜவஹர், விரைவில் தீர்வுகாண நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன்பிறகு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். ஆட்சியரை முற்றுகையிட்டு பொதுமக்கள் அடிப்படை வசதி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது.

அப்போது, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நடத்திய ஆய்வில் எஸ்.பி., டாக்டர் பாலகிருஷ்ணன், எம்எல்ஏக்கள் செந்தில்குமார் (வாணியம்பாடி), வில்வநாதன் (ஆம்பூர்), திட்ட இயக்குநர்செல்வராசு, மாவட்ட வழங்கல்அலுவலர் விஜயன், வட்டாட்சி யர்கள் அனந்தகிருஷ்ணன் (ஆம்பூர்), சிவப்பிரகாசம் (திருப்பத் தூர்) உட்பட பலர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்