கோவையில் ரயில் மோதி யானைகள் உயிரிழந்த விவகாரத்தில், ரயில் ஓட்டுனர் மற்றும் உதவியாளர் மீது வன சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
கோவை வனக் கோட்டத்துக்குட்பட்ட மதுக்கரை வனச்சரகத்தில் கடந்த 26-ம் தேதி மங்களூர்-சென்னை விரைவு ரயில் வாளையாரிலிருந்து இருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த போது இரவு 9 மணி அளவில் மதுக்கரை வனச்சரகத்தில் உட்பட்ட சோளக்கரை, போளுவாம்பட்டி காப்பு காட்டில் மூன்று யானைகள் மீது ரயில் மோதியதில் மூன்று யானைகளும் சம்பவ இடத்தில் உயிரிழந்தது. இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறக் கூடாது என்பதற்காக தமிழக வனத்துறை சார்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் தெரிவித்தார்.
அவர் கூறும் போது, ‘முதல் கட்ட விசாரணையில் வாளையாறில் இருந்து கோவை நோக்கி செல்லும் ரயில் தடம் பில் செல்லும். ஆனால் சம்பவம் நடைபெற்ற 26-ம் தேதி அன்று பி தடத்தில் சரக்கு வண்டி சென்று கொண்டிருந்த காரணத்தால் தடம் ஏல் சென்று உள்ளதாக தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக ரயில் இஞ்சின் ஓட்டுனர் மற்றும் உதவியாளர் மீது வன சட்டம் 1972 பிரிவு 9ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ரயில் வனப்பகுதி வழியாக செல்லும்போது 30 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என்பது சட்டம். ஆனால், சம்பவம் நடைபெற்ற அன்று ரயில் சென்று வேகத்தை கண்டறிய வேகம் அறியும் சிப்பை வனத்துறையினர், பாலக்காடு ரயில் நிலையத்திலிருந்து பறிமுதல் செய்து ஆய்வு நடத்தி வருகின்றனர். எதிர்காலத்தில் யானைகள் உட்பட வனவிலங்குகள் ரயில் மோதி உயிர் இழப்பதை தடுக்க வனத்துறையினர், வனவிலங்கு வல்லுனர்களை கொண்டு குழு அமைக்கப்பட்டு முழுமையாக கண்காணிக்கப்படும். இதற்காக எதிர்வரும் 1-ம் தேதி சென்னையில் வனத்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடக்கவுள்ளது. வனப்பகுதிக்குள் ரயில்கள் கட்டாயம் 30 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என்பதை ரயில்வே நிர்வாகம் வனவிலங்குகள் பாதுகாப்புக் கருதி உறுதி செய்ய வேண்டும் என்பது குறித்து ரயில்வே நிர்வாகத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago