சாலையின் குறுக்கே அறுந்து விழுந்த மின் கம்பி - சிறுவனின் சாதுர்யத்தால் அசம்பாவிதம் தவிர்ப்பு :

சங்கராபுரம் அருகே அரசம்பட்டு கிராமத்தில் சாலையின் குறுக்கே அறுந்து விழுந்த மின்கம்பி குறித்து கூச்சலிட்டு அப்பகுதியை யாரும் கடக்காத வகையில் சிறுவன் செயல்பட்டதால் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் அரசம்பட்டு கிராமத்தில், சங்கராபுரத்தில் இருந்து பாலப்பட்டு செல்லும் சாலையின் குறுக்கே மின்கம்பிகள் நேற்று பிற்பகல் திடீரென அறுந்து கீழே விழுந்துள்ளது. அப்போது அங்கே விளையாடிக் கொண்டிருந்த சொக்கலிங்கம் மகன் அரவிந்த், மின்கம்பி அறுந்து விழுந்ததைக் கண்டார். சாலையில் சென்றவர்களை மறித்து, மின்கம்பி அறுந்து விழுந்துள்ளது என்ற தகவலைக் கூறி, சாலையின் இருபுறங்களிலும் வாகன ஓட்டிகளை மறித்து தடுத்து நிறுத்தியுள்ளார்.இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு வந்த சிலர் சங்கராபுரம் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் அளித்தனர். இதன் பேரில், அவர்கள் வந்துஅறுந்து கிடந்த மின் கம்பியை சரிசெய்து விட்டு சென்றனர்.

மழைக்காலத்தில் ஆங்காங்கே மின்கசிவு ஏற்பட்டு பல்வேறு அசம் பாவித சம்பங்கள் நடைபெறும் நிலையில், அரசப்பட்டில் பள்ளிச் சிறுவனின் சாதூர்யமான செயலால் அசம்பாவித சம்பவம் தடுக்கப்பட்டிருப்பதாகக் கருதி அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சிறுவனின் செயலை பாராட்டி சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE