மானாமதுரை வைகை ஆற்றில் வெள்ளம் - நாட்டார் கால்வாயில் தண்ணீர் திறக்க தயங்கும் பொதுப்பணி துறை அதிகாரிகள் :

வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் மானாமதுரை அருகே நாட்டார் கால்வாயில் தண்ணீர் திறக்க பொதுப்பணித் துறை அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

மானாமதுரை அருகே ஆர்.புதூர், அன்னவாசல், கிளங் காட்டூர், கரிசல்குளம், வளநாடு, அரிமண்டபம் உள்ளிட்ட 16 கிராமங்கள் மழை மறைவுப் பகுதிகளாக உள்ளன. அப்பகுதி மக்களின் தொடர் போராட்டத்தை அடுத்து 20 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.4 கோடியில் கிருங்காக்கோட்டை அருகே வைகை ஆற்றில் இருந்து நாட்டார் கால்வாய் அமைக்கப்பட்டது. இக்கால்வாய் மூலம் 16 பெரிய கண்மாய்கள், 25 சிறிய கண்மாய்கள், 25-க்கும் மேற்பட்ட குளங்கள் பயன்பெறுகின்றன. மொத்தம் 10,000 ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெறுகின்றன.

இதுவரை இக்கால்வாயில் வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் திறந்ததில்லை. தற்போது வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

வைகை பாசனத்துக்குரிய பெரும்பாலான கண்மாய்கள் நிரம்பிய நிலையில், நாட்டார் கால்வாயில் தண்ணீர் திறக்க அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதுகுறித்து நாட்டார் கால்வாய் பாசன சங்கத் தலைவர் துபாய் காந்தி கூறியதாவது:

16 கிராமங்களில் கண்மாய் நீரை நம்பியே விவசாயம் செய்கின்றனர். கால்வாயில் வைகை தண்ணீர் வந்ததில்லை. இதனால் 20 ஆண்டுகளில் பலர் விவசாயத்தைக் கைவிட்டு வெளியூர்களுக்கு சென்று விட்டனர். வைகை தண்ணீர் வந்தால் மீண்டும் விவசாயம் தழைக்கும். தற்போது வைகை ஆற்றில் வெள்ளநீர் செல்கிறது. இப்போதாவது நாட்டார் கால்வாயில் தண்ணீரைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE