ஒகேனக்கல்லில் நீர்வரத்து 20 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு :

By செய்திப்பிரிவு

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நேற்று முன்தினம் விநாடிக்கு 19 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 20 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக ஏற்கெனவே பிரதான அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட இடங்களில் பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் பயணிகள் பரிசல் சவாரி செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதனால், நேற்று பயணிகள் பரிசலில் சென்று காவிரியின் அழகை பார்த்து மகிழ்ந்தனர்.

மேலும், வழக்கத்தை விட பயணிகள் வருகை குறைவாக இருந்ததால் பெரும்பாலான பரிசல் இயக்கப்படவில்லை என பரிசல் ஓட்டிகள் தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரி அணை

தென்பெண்ணை நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த தொடர் மழையால், கிருஷ்ணகிரி மற்றும் கெலவரப்பள்ளி அணைகள் நிரம்பி உள்ளன. இந்நிலையில், அணைகளுக்கு வரும் நீர்வரத்து தற்போது குறைந்து வருகிறது. கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 2,585 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 2,292 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 2,501 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை நீர்மட்டம் 50.50 அடியாக உள்ளது.

இதனிடையே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெய்த மழையளவு (மில்லமீட்டரில்) விவரம்: தளி 5, ஓசூர் 4, தேன்கனிக்கோட்டை 3, சூளகிரி, நெடுங்கல் 2, பாரூரில் 1 மிமீ மழை பதிவானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்