திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை - கனமழைக்கு 1,503 வீடுகள் சேதம் : மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தகவல்

By செய்திப்பிரிவு

திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை கனமழைக்கு 1,503 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கிர்லோஷ்குமார் தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், கனமழை காரணமாக மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அரசு செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான கிர்லோஷ்குமார், ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் ஆகியோர் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

முன்னதாக, மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர்கள் பார்வையிட்டனர். திருவாரூர் வட்டம் பழவனக்குடி கிராமத்தில் உள்ள நிவாரண முகாம், நன்னிலம் வட்டம் வாஞ்சியாற்றின் கரைப் பகுதி ஆகிய இடங்களை பார்வையிட்ட பின்னர், கண்காணிப்பு அலுவலர் கிர்லோஷ்குமார் தெரிவித்தது:

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக, இதுவரை 1,287 கூரை வீடுகள் பகுதியாகவும், 34 வீடுகள் முழுமையாகவும், 182 ஓட்டு வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. அதேபோல, 146 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. பழவனக்குடி கிராமத்தில் நிவாரண முகாம் அமைக்கப்பட்டு, 28 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து, தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற வேண்டும். கால்நடை இறப்புக்கான பிரேத பரிசோதனை அறிக்கையை காலந்தாழ்த்தாமல் வழங்கவேண்டும் என தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

இந்நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தெய்வநாயகி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்