பாதாள சாக்கடை திட்டத்தால் - காட்பாடியில் சேதமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் : குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்குவதால் நோய் தொற்று பரவும் அபாயம்

By செய்திப்பிரிவு

வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலம் விருதம்பட்டு  ராஜீவ்காந்தி நகரில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை மேற்கொள்வதற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சரியாக மூடப்படாததால் அங்குள்ள சாலைகள் மழையால் சேறும், சகதியுமாக மாறியுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தாழ்வானப் பகுதிகளில் மழைவெள்ளம் சூழ்ந்துள்ளது. பல பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து தடைபட்டுள்ளது. நீர்நிலைகள் நிரம்பி அதிலிருந்து வெளியேறி வரும் தண்ணீர் குடியிருப்புப் பகுதிகளில் நுழைந்து வருவதால் பல வீடுகள் நீரில் மிதக்கின்றன. மழை வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள் சீரமைக்க முடியாமல் மாவட்ட நிர்வாகம் திணறி வருகிறது. குறிப்பாக, மாநகராட்சிக்கு உட்பட்ட பல வார்டுகளில் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளன.

தேங்கிய நீரில் செல்லும் வாகனங்கள் குண்டும், குழியுமான சாலைகளில் சிக்கி வாகன ஓட்டிகள் விழுந்து, எழுந்து செல்கின்றனர். சில இடங்களில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பல கிலோ மீட்டர் தொலைவு சுற்றிச்செல்லும் நிலைக்கு வாகன ஓட்டிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலத்தில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில், மதிநகர், அண்ணாமலை நகர், கணபதி நகர், வி.ஜி.ராவ்நகர், பாரதி நகர், ஓ.சி.பெருமாள் நகர்,  பாலாஜி நகர், அருப்புமேடு, கழிஞ்சூர், விருதம்பட்டு,  ராஜீவ்காந்தி நகர், நேதாஜி நகர், லஷ்மி நகர் போன்ற பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டு குட்டித்தீவுப்போல உள்ளது.

இப்பகுதிகளில் கடந்த 2019-ம் ஆண்டு பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடப்படவில்லை. சில இடங்களில் தற்போதும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. பணிகள் முடிந்த இடங்களில் சாலைகள் சீரமைக்கப்படவில்லை.

இதனால், மழைநீர் தேங்கி பெரும்பாலான சாலைகள் சேறும், சகதியுமாககாணப்படுகிறது. இதனால், அவ் வழியாக செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். குடியிருப்புப்பகுதி முழுவதும் மழைநீர் வாரக்கணக்கில் தேங்குவதால் கொசு உற்பத்தியாகி பல விதமான நோய் தொற்று ஏற்படுகிறது. கழிவுநீருடன், மழைநீர் கலந்து சாலைகளில் ஓடுவதால் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். மழைக்கால நோய்கள் காட்பாடியில் வேகமாக பரவி வருவதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து விருதம்பட்டு  ராஜீவ்காந்தி நகர் பொதுமக்கள் கூறியதாவது, “பாதாள சாக்கடை பணிக்காக தோண்டிய பள்ளங்கள் சரியாக மூடப்படவில்லை. பள்ளம் தோண்டிய இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட மண் சாலை முழுவதும் பரப்பி சீரமைத்திருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. பாதாள சாக்கடை திட்ட பணியாளர்கள் அவசர கதியில் செய்த அரைகுறை பணியால் தற்போது அனைத்து சாலைகளும் சேறும், சகதியுமாக உள்ளது. இது குறித்து 1-வது மண்டல அலுவலக அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்ததின் பேரில், மாநகராட்சி அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு செய்து புதிய காங்கிரீ்ட் போடவும், முடிந்த பகுதிகளில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

சாலை அமைப்பதற்காக ஏற்கெனவே டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆனால், அப்பணிகள் இன்னும் தொடங்காமல் இருப்பதால் எங்களை ஏமாற்றுவதாக உள்ளது. சாலை முழுவதும் மழைநீர் தேங்கி வெளியேறாமல் சாலையிலேயே தேங்கி நின்று சேறும், சகதியுமாக உள்ளது.

இதனால் இந்த வழியாக செல்லும் பொது மக்கள், இரு சக்கர வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். சில சமயங்களில் இரு சக்கர வாகன ஓட்டிகள் சேறும் சகதியுமான சாலையில் வழுக்கி விழுந்து எழுந்து செல்கின்றனர். எனவே, பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்பதே எங்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது’’ என்றனர்.

இது தொடர்பாக மாநராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, மழையால் சேதமடைந்த சாலைகள் கணக்கீடு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. தொடர்ச்சியாக மழை பெய்துவருவதால் பணிகள் தாமதமாகின்றன. காட்பாடி பகுதிகளில் சேதமடைந்த சாலைகள் விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்பதே எங்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்