ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் 411 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.
தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை நீடித்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைத் தொடர்ந்து ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்திலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மழைப் பொழிவு இல்லாமல் இருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு பிறகு சாரல் மழை பெய்ய தொடங்கியது.
நள்ளிரவு முதல் கொட்ட தொடங்கிய மழை அதிகாலை வரை நீடித்தது. நேற்று காலை முதலே மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவ தால் அனைத்து நீர் நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 519 ஏரிகளில் 411 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கண்காணிப்பில் உள்ள 101 ஏரிகளில் 82 ஏரிகளும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 49 ஏரிகளில் 33 ஏரிகளும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 369 ஏரிகளில் 296 ஏரிகளும் என மொத்தம் 411 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேறி வருகின்றன.
29 ஏரிகளில் 75 % தண்ணீரும், 24 ஏரிகளில் 50 % தண்ணீரும், 55 ஏரிகளில் 25 % தண்ணீரும் உள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் மழை நீடிக்க வாய்ப்புள்ளதால் மேலும் சில ஏரிகள் விரைவில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிரம்பி வழியும் ஏரிகளும், நிரம்பும் தருவாயில் உள்ள ஏரிகளை பொதுப்பணித்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மோர்தானா அணை முழு கொள் ளளவை எட்டியுள்ளது. அணைக்கு நீர்வரத்து 1,638 கன அடியாக உள்ளது. அதே அளவு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கே.வி.குப்பம் அடுத்த ராஜாதோப்பு அணையின் நீர்வரத்து 13.07 கன அடியாக உள்ளது. அதே அளவில் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. திருப்பத்தூர் மாவட்டம் ஆண்டியப்பனூர் அணை முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மீட்கப்பட்டு சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்காக, மாவட்டம் முழுவதும் 37 இடங்களில் 923 முகாம்கள் அமைக்கப் பட்டுள்ளன. இதில், 3,314 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். திருப் பத்தூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள 208 குடும்பங்களைச் சேர்ந்த 575 நபர்கள் தங்க வைக்கப் பட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் கனமழையால் பாதிக் கப்பட்ட 60 நபர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர் களுக்கு தேவையான உதவிகளை அந்தந்த மாவட்ட வருவாய்த் துறையினர் செய்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் மழை யால் சேதமடைந்த பகுதிகளை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேரில் ஆய்வு செய்து, அங்கு மீட்புப்பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் கனமழையால் பாதிப்புக்குள்ளான பகுதிகளை ஆய்வு செய்து பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கவும், சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பதிவான மழையளவு விவரம்:
வேலூர் 5.5 மி.மீ., குடியாத்தம் 4.2, மேல் ஆலத்தூர் 6.2, காட்பாடி 4, அம்முண்டி 2, பொன்னை 7, ஆலங்காயம் 2, ஆம்பூர் 10.2, வடபுதுப்பட்டு 7.2, வாணியம்பாடி 4 , அரக்கோணம் 29.6, ஆற்காடு 4.2, காவேரிப்பாக்கம் 14, வாலாஜா 8.4, அம்மூர் 10, சோளிங்கர் 17.8, கலவை 5.2 மி.மீ., மழை பதிவாகியுள்ளன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago