மருத்துவ சிகிச்சைக்காக வேலூருக்கு வந்த வெளி மாநிலத்தவர்கள் மூலம் கரோனா பாதிப்பு வேலூர் மாவட்டத்தில் அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து, நோய் தடுப்புப்பணிகளை தீவிரப் படுத்த சுகாதாரத் துறையினருக்கு ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்ததால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. மேலும், கரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர மாநிலம் முழுவதும் தடுப்பூசி முகாம் தீவிரமாக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் நடமாடும் மருத்துவக்குழுக்கள் மூலம் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக்கப்பட்டு வருவதால் கரோனா தொற்று குறைந்து பல்வேறு மாவட்டங்களில் தினசரி ஒற்றை இலக்கில் பாதிப்புகள் இருந்து வந்தன.
வேலூர் மாவட்டத்தை பொறுத்த வரை கடந்த ஒரு மாதமாக கரோனா பாதிப்பு குறைவாகவே காணப்பட்டு வந்தன. கடந்த 15-ம் தேதிக்கு பிறகு பாதிப்பு எண்ணிக்கை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது.
இதையடுத்து, தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக்கப் பட்டு வந்தன. கடந்த 24-ம் தேதி 20 நபர்கள், 25-ம் தேதி 17 நபர்கள், 26-ம் தேதி 11 நபர்கள், 27-ம் தேதி 16 நபர்கள் என இருந்த பாதிப்பு 28-ம் தேதியான நேற்று ஒரே நாளில் 31 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது சுகாதாரத் துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா போன்ற நாடுகளில் உருமாறிய கரோனா தொற்று அதிகரித்து வரும் நேரத்தில் வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று நேற்று அதிகரித்து காணப்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இது குறித்து சுகாதாரத் துறையினர் கூறும்போது, "வேலூர் மாவட்டத்தில் தினந்தோறும் கரோனா பரிசோதனை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
இதில், இன்று (நேற்று) ஒரே நாளில் 31பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், மருத்துவ சிகிச்சைக்காக வேலூர் மாவட்டத்துக்கு வந்துள்ள வெளி மாநிலத்தவர்கள் 15 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், அவர்கள் தங்கியிருந்த விடுதிகளில் இருந்தவர்கள் என அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற் கொள்ளப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் பொது இடங் களில் வரும்போது கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும்.கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும். தடுப்பூசி போடாதவர்கள் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். முதல் தவணை தடுப்பூசி செலுத்தி அதற்கான காலக்கெடு கடந்தவர்கள் இனியும் தாமதம் செய்யாமல் விரைவாக 2-ம் தவணை தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும். பொது இடங்களில் கூட்டமாக சேருவதை தவிர்க்க வேண்டும். சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்’’ என்றனர்.
வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் நோய் தடுப்புப்பணிகளை தீவிரப் படுத்த வேண்டும்,தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் சுகாதாரத் துறையினருக்கு உத்தர விட்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று பாதிப்பு 10 -ஆக இருந்தது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் பொது இடங்களில் வரும்போது கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago