உதகை அருகே கனாகொம்பை பகுதியில் உள்ள பள்ளியை சிலர் சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்தி வருவதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே தும்மனட்டி ஊராட்சிக்கு உட்பட்டது கனாகொம்பை. இப்பகுதியில், சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலான மக்கள் தினக்கூலிகளாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அருகேயுள்ள காய்கறி தோட்டங்களில் தோட்ட தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.
இங்கு வசிக்கும் மக்களின் குழந்தைகள் படிக்க தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் கடந்தாண்டு இந்த பள்ளி ஆங்கில வழி பள்ளியாக மாற்றப்பட்டது. தற்போது, சுமார் 20 குழந்தைகள் இப்பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், இப்பகுதியில் உள்ள சிலர் பள்ளியை சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்துவதாக பெற்றோர் புகார் தெரிவிக்கின்றனர். பெற்றோர் கூறும் போது, ‘இப்பள்ளி ஆங்கில வழிப்பள்ளியாக மாற்றப்பட்டு, கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டன. பள்ளியை சீரமைத்து, சுற்றுச்சுவர் அமைத்து மாணவர்கள் பாதுகாப்புக்காக நுழைவு வாயில் அமைக்கப்பட்டது.
பள்ளி நேரத்துக்கு பின்னரும், விடுமுறை நாட்களிலும் மாணவர்கள் பள்ளிக்கு வராத நிலையில், சிலர் சமூக விரோத செயல்களுக்கு இப்பள்ளியை பயன்படுத்துகின்றனர். நுழைவு வாயிலை சேதப்படுத்தியவர்கள், பள்ளிக்குள் நுழைந்து அங்குள்ள புல்தரையில் அமர்ந்து மது அருந்துகின்றனர். மேலும், அங்கேயே மது பாட்டில்கள் மற்றும் கழிவுகளை வீசி செல்கின்றனர். மேலும், சிலர் வாகனங்களை பள்ளிக்குள் விட்டு திரும்பி பள்ளி வளாகத்தை சேதப்படுத்தி வருகின்றனர். இது குறித்து பள்ளி நிர்வாகமும் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். ஆனால், யாரும் இல்லாத நேரத்தில் இவர்கள் பள்ளிக்குள் நுழைந்து சமூக விரோத செயல்களின் ஈடுபடுவது தொடர்கதையாக உள்ளது.
இத்தகைய நடவடிக்கை தொடர்ந்தால் பள்ளி மூடப்படும் அபாயம் உள்ளது. பள்ளி மூடப்பட்டால், எங்கள் ஊர் குழந்தைகள் சுமார் 5 கி.மீ., தூரமுள்ள கப்பச்சி அல்லது தும்மனட்டி கிராமத்தில் உள்ள பள்ளிக்கு சென்று படிக்க வேண்டிய நிலை ஏற்படும். கப்பச்சி வரையில் மட்டுமே அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதால், மாணவர்கள் நடந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்படும். எனவே, நுழைவு வாயிலை சீரமைத்து, பள்ளிக்குள் யாரும் நுழையாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்றனர். பள்ளி நிர்வாகம் சார்பில் இது குறித்து மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது எனவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago