கோத்தகிரி ஈளாடா பேங்க் ஆஃப் இந்தியாவின் வங்கிக் கிளையில் போலி நகைகளை வைத்து ரூ.94.45 லட்சம் மோசடி செய்த 11 பேரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி ஈளாடா பகுதியில் செயல்பட்டு வரும் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக்கிளையில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வந்த சிவா என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இவருடன் சேர்ந்து 38 வாடிக்கையாளர்கள் போலி நகைகளை அடகு வைத்து ரூ.94.45 லட்சம்மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து வங்கி மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் 11 பேரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து சிறப்புப்பிரிவு ஆய்வாளர் ஆ.சபாஷினி கூறியதாவது:
கோத்தகிரி ஈளாடா பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில், கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி முதல் பல்வேறு தேதிகளில் 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை 38 வாடிக்கையாளர்கள் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.94 லட்சத்து 45 ஆயிரத்து 500 தொகையை பெற்றுள்ளனர். அந்த தொகையை, அவர்களது பழைய நகைக்கடன்கள், பயிர்க்கடன்கள் மற்ற வெளிக்கடன்களுக்கு மாற்றியும்,பணம் எடுப்பு சீட்டு மூலம் எடுத்து பயன்படுத்தியும் முறையற்ற வழியில் லாபம் அடைந்துள்ளனர்.
வங்கி சார்பில், மாவட்ட குற்றப்பிரிவில் கடந்த 25-ம் தேதி புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து 38 பேரில், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி எஸ்.கைகாட்டியை சேர்ந்த ப.ரவி(40), ரா.மகாலிங்கம் (39), அ.சுதாகர்(43), ப.மகாதேவன் (53), ம.சேகர் (50), சுமதி (40), மிலிதேன் பகுதியை சேர்ந்த ரா.கனகராஜ் (30), கன்னேரிமுக்கை சேர்ந்த ந.கிருஷ்ணமூர்த்தி (40), கோடநாட்டை சேர்ந்த மா.லிங்கராஜ் (52), சுள்ளிகூட்டை சேர்ந்த ர.கணேஷ் (30), மா.நடராஜ் (46) ஆகிய 11 பேர் கைது செய்ய பட்டுள்ளனர். மற்றவர்களை தேடி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago