கப்பல்வாடி, வரட்டனப்பள்ளியில் கற்கால மனிதர்கள் கல்ஆயுதங்கள் செய்ததற்கான ஆதாரம், தடயங்கள் காணப்படுகிறது என வரலாற்றுத் துறை பேராசிரியர் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், உலக பாரம்பரிய வார விழாவையொட்டி வரலாற்று கருத்தரங்கு நடந்தது. கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி தொல்லியல் அலுவலர் பரந்தாமன் கருத்தரங்கின் முக்கியத்துவம் குறித்து பேசினார். அரசு ஆடவர் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் வெங்கடேஸ்வரன், மாவட்ட தொல்லியல் எச்சங்கள் என்கிற தலைப்பில் பேசியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டம், பழைய கற்காலம் தொடங்கி இன்று வரை பல வரலாற்று சிறப்பு களையும், பெருமைகளையும் கொண்டது. இம்மாவட்டத்தில், கப்பல்வாடி, வரட்டனப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் கற்கால மனிதர்கள் கல் ஆயுதங்கள் செய்ததற்கான ஆதாரங்களும், தடயங்களும் காணப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து நுண்கருவி காலம், புதிய கற்காலம் மற்றும் இரும்புக் கால மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் ஏராளமாக இங்கு தற்போது வரை கிடைக்கிறது.
இதற்கு சான்றாக மாவட்டத்தில் நுண்கருவி, புதிய கற்கால கல் ஆயுதங்கள், இரும்புக் காலத்தை சேர்ந்த ஈட்டி முனைகள் மற்றும் புதிய கற்கால, பெருங்கற்கால ஓவியங்களும் கிடைக்கின்றன. இவையெல்லாம் கற்கால மனிதர்கள் இம்மாவட்டத்தில் வாழ்ந்ததற்கான ஆதாரங்களாக விளங்குகின்றன. மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு தொன்மையான நினைவுச் சின்னங்களை பாதுகாப்பது நம் எல்லோருடைய கடமையும், பொறுப்பும் ஆகும் என்று உறுதி ஏற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago