செங்கம் அருகே பாசனக் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் உள்ளதைக் கண்டித்து நேற்று நடைபெற்ற சாலை மறியலில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தி.மலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்கிரிபாளையம் கிராமத்தில் தொடர்மழை காரணத்தால் ஏரி நிரம்பி கடந்த ஒரு மாதமாக வெளியேறுகிறது. இந்நிலையில் பாசனக் கால்வாயில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால், ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர், முழுமையாக வழிந்தோட முடியாததால் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துள்ளது.
இதனால் பாதிக்கப்பட்டுள்ள கிராம மக்கள், தி.மலை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறும்போது, “ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர், குடியிருப்புப் பகுதியில் தேங்கி நிற்கிறது. அதனுடன், கழிவுநீரும் கலந்துள்ளதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமான கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பலமுறை வலியுறுத்தியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த செங்கம் வட்டாட்சியர் முனுசாமி, செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் சின்னராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்கள், கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியல் முடிவுக்கு வந்தது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago