திருப்பூரில் நடந்த பாஜக அலுவலக திறப்பு விழா கல்வெட்டில், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் என பாஜகவின் நயினார் நாகேந்திரன் என பெயர் பொறிக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.
திருப்பூர் வித்யாலயம் பகுதியில், வடக்கு மாவட்ட பாஜக அலுவலகத் திறப்பு விழா கடந்த 24-ம் தேதி நடந்தது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்று திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மட்டுமின்றி, திருப்பத்தூர், திருநெல்வேலி, ஈரோடு மாவட்ட அலுவலகங்களையும் காணொலிக் காட்சி மூலம் அவர் திறந்து வைத்தார்.
இந்நிலையில், திருப்பூரில் புதிய அலுவலக கட்டிடத்தில் பதிக்க வைக்கப்பட்டிருந்த கல்வெட்டில், நயினார் நாகேந்திரன் பெயருக்குக்கீழ், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் என பொறிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக அதிமுகவின் துணைஒருங்கிணைப்பாளர் பழனிசாமி செயல்பட்டு வரும் சூழ்நிலையில், அதிமுகவின் கூட்டணி கட்சியானபாஜக சட்டப்பேரவை உறுப்பினருக்குசட்டப்பேரவை எதிர்க்கட்சித்தலைவர் பொறுப்புடன் கல்வெட்டுபதிக்கப்பட்டிருப்பது சர்ச்சையைஏற்படுத்திஉள்ளது.
ஏற்கெனவே திருப்பத்தூரில் வைக்கப்பட்டிருந்த கல்வெட்டிலும், இதேபோன்று பொறிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திருப்பூரில் அதேபோன்று அமைக்கப்பட்டுள்ளது. பாஜகவின் சட்டப்பேரவை உறுப்பினரான நயினார் நாகேந்திரன், பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக மட்டுமே உள்ளார். இந்நிலையில் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் என்று எப்படி போடலாம் என்று பலரும் சமூகவலைதளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இது தொடர்பாக பாஜகவினர் கூறும்போது, ‘‘ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கல்வெட்டில் அப்படி இல்லை. தமிழில் எழுதப்பட்ட கல்வெட்டில் அப்படி ஏதாவது இருந்திருக்கலாம். இதனை பெரிதுபடுத்த தேவையில்லை’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago