ராமநாதபுரத்தில் உரத்தட்டுப்பாடு, பயிர் கடன் பிரச்சினை : ஆட்சியரிடம் விவசாயிகள் முறையீடு

By செய்திப்பிரிவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலவும் உரத்தட்டுப்பாடு, பயிர் காப்பீடு, பயிர்க்கடன் பிரச்சினைகளை போக்க வேண்டும் என பெரும்பாலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சியரிடம் முறையிட்டனர்.

ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சங்கர்லால் குமாவத் தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், வேளாண்மை இணை இயக்குநர் டாம் பி.சைலஸ், கூட்டுறவுத்துறை மண்டல இணைப் பதிவாளர் ராஜேந்திர பிரசாத், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) தனுஷ்கோடி, வேளாண்மை துணை இயக்குநர் ஷேக் அப்துல்லா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் பேசியதாவது: நெல் வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த நேரத்தில் தான் உரமிடும் பணி தீவிரமாக உள்ளது. ஆனால் யூரியா உரம் தட்டுப்பாடாக உள்ளது. தனியார் உரக்கடைகளில் கூடுதல் விலைக்கு விற்கின்றனர். உரத் தட்டுப்பாட்டை போக்க வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களில் விவசாயிகள் உரம் வாங்கிக் கொள்ள அனுமதித்திருந்தாலும், பயிர்க் கடன் வாங்காத விவசாயிகளுக்கு உரம் வழங்கப்படுவதில்லை.

அதேபோல, பெரும்பாலான கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்க்கடன் வழங்காமல் தாமதம் செய்கின்றனர்.

2020-21-ம் ஆண்டில் பருவம் தவறி பெய்த மழையால் நெல், மிளகாய் விவசாயம் அழிந்தது. இதற்கு தமிழக அரசு ஏக்கருக்கு ரூ. 8 ஆயிரம் நிவாரணம் வழங்கியது. ஆனால் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால் காப்பீடு செய்த 5,206 விவசாயிகளுக்கு ரூ. 2.42 கோடி மட்டும் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் விவசாயிகளின் பங்காக ரூ. 8 கோடியும், மத்திய, மாநில அரசுகளின் மானியம் ரூ. 142 கோடி என ரூ. 150 கோடி காப்பீடு நிறுவனத்துக்கு பிரிமியமாக செலுத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு பகுதிகூட இழப்பீடு வழங்கப்படவில்லை. அதனால் முழு இழப்பீடும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் கடந்தாண்டு மிளகாய்க்கு இன்சூரன்ஸ் செய்தவர்களுக்கு இன்னும் இழப்பீடு வழங்கப்படவில்லை. தட்டுப்பாடு இல்லாமல் உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

ஆட்சியர் பேசியதாவது: கடந்தாண்டுக்கான பயிர் காப்பீடு முழுமையாக பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். 1000 டன் யூரியா வர உள்ளது. உரம் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் கடந்தாண்டு ரூ. 51.21 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் கோரிக்கையின்படி, இந்தாண்டு ரூ. 150 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவ மழையால் இந்தாண்டு இதுவரை 944 ஹெக்டேர் நெல் பயிர் சேதமடைந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE