விற்பனையில் விதிமீறல் - ராமநாதபுரத்தில் 23 உரக் கடைகள் மீது நடவடிக்கை :

By செய்திப்பிரிவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் உர விற்பனையில் விதிமீறலில் ஈடுபட்டது தொடர்பாக 23 தனியார் உரக்கடைகள் மீது வேளாண் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக உரத் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் தனியார் உரக்கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு உரம் விற்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். மாவட்ட வேளாண் துறை இணை இயக்குநர் டாம்.பி.சைலஸ் தலைமையிலான சிறப்புக் குழு உரக்கடைகளில் சோதனை நடத்தியது.

விலைப் பட்டியல் வைக்காதது, ரசீது தராமல் விற்பனை செய்தது, கூடுதல் விலைக்கு உரம் விற்றது ஆகிய விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 23 தனியார் உரக் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இக்கடைகளின் உரிமத்தை ரத்து செய்வது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

இதில் கடும் விதிமீறலில் ஈடுபட்ட ராமநதாபுரம் நகரில் உள்ள 2 உரக் கடைகள், பரமக்குடியில் உள்ள 2 கடைகள், சிக்கல், முதுகுளத்தூரில் உள்ள தலா 1 கடையில் உரம் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் நடத்திய சோதனையில் 3 சங்கங்களில் முறையாக உரம் விநியோகிக்கப்படவில்லை என்றும், விவசாயிகளுக்கான கடன் வழங்குவதில் விதிமீறல் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அந்தச் சங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட இணைப் பதிவாளருக்கு வேளாண் துறை சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்