சிவகங்கை அருகே பெரியாறு கால்வாயில் இருந்து விடுபட்ட 10 கிராமங்களைச் சேர்ந்த கண் மாய்களைச் சேர்க்க அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக விவசாயிகள் குறைதீர்க் கூட்டத்தில் ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி தெரிவித்தார்.
விவசாயிகள் குறைதீர்க் கூட்டம், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் விவசாயி ஆதிமூலம் பேசியதாவது:
இளையான்குடி அருகே வண்டல் கூட்டுறவுச் சங்கத்தில் பயிர் நகைக்கடன் வழங்க மறுக்கின்றனர். பயிர்க்கடன் வழங்கும்போது பிடித்தம் செய்யும் 10 சதவீதம் பங்கு தொகையை திருப்பிக் கேட்டால் தர மறுக்கின்றனர். வைகை அணையைக் கட்டி 63 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை அணையில் தேங்கிய சேறு, சகதியை அகற்றவில்லை. மணல் போக்கியில் இருந்து தண்ணீர் திறந்தால், சேறும், சகதியும் சேர்ந்து வெளியேறும். இதனால் அணையில் தேங்கிய சேறும், சகதியும் குறையும், என்றார்.
விவசாயி சேதுராமன் கூறுகை யில், ‘பிரவலூர், கீழப்பூங்குடி, ஒக்கூர், மேலமங்கலம், காஞ்சிரங்கால் உள்ளிட்ட 10 கிராமங்களுக்குட்பட்ட 30 கிராமங்கள் பெரியாறு கால்வாய் பாசனத்தில் இருந்து விடுபட்டுள்ளன. இதனால் 2,000 ஏக்கர் நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. பிரவலூர் கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்,’ என்றார்.
தேவகோட்டை விவசாயிகள் பேசியதாவது: ஆர்.என்.ஆர். நெல் ரகத்தை தேவகோட்டை, கண்ணங்குடி பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்துள்ளோம். ஆனால், தற்போது பெய்த மழையால் நெற்பயிர்கள் முழுவதும் சாய்ந்து பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது என்றார்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி பேசியதாவது:
மாவட்டத்தில் விவசாயிகளுக்கு 2.4 லட்சம் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. பெரியாறு கால்வாயில் விடுபட்ட 10 கிராமங்களைச் சேர்ந்த கண்மாய்களை சேர்க்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் இதுவரை ரூ.83 கோடி பயிர்க்கடன் கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.150 கோடி பயிர்க்கடன் வழங்கப் படும். கூட்டுறவு சங்கங்கள் பயிர்க்கடன் தராவிட்டால் புகார் தெரிவிக்கலாம் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago