வேப்பனப்பள்ளி அருகே ஆபத்தான முறையில் - ஆற்றை கடந்து பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் :

By எஸ்.கே.ரமேஷ்

வேப்பனப்பள்ளி அருகே பள்ளி மாணவ, மாணவிகள், விவ சாயிகள் ஆபத்தான முறையில் ஆற்றங்கரையைக் கடந்து சென்று வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியத் துக்கு உட்பட்ட கிராமம் இனாம் குட்டப்பள்ளி. இக்கிராமத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 150-க்கும் அதிக மான மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் போதிய சாலை வசதி இல்லை. இக்கிராம மக்கள் வேப்பனப்பள்ளி ஆற்றினை கடந்து தான் சென்று வர வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில், ஆந்திர மாநில எல்லையில் பெய்த கனமழையால் வேப்பனப்பள்ளி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் இக்கிராம மக்கள் ஆற்றின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு கயிறு கட்டி ஆபத்தான முறையில் அச்சத்துடன் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளதாக கூறுகின்றனர் இப்பகுதி மக்கள்.

இதுதொடர்பாக அவர்கள் மேலும் கூறும்போது, எங்கள் கிராமத்தில் இருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர். இதேபோல் விவசாய கூலி வேலைக்கும், அறுவடை செய்த காய்கறிகளை சந்தைகளுக்கும், தினமும் பால் ஊற்றுவதற்கும் வேப்பனப்பள்ளி ஆற்றினை கடந்து சென்று வர வேண்டும்.

கிராமத்துக்கென சாலை வசதி இல்லாததால், நாங்கள் ஒன்றிணைந்து ரூ.30 லட்சம் மதிப்பில் சாலை அமைக்க பட்டா நிலம் எங்கள் ஊர் பெயரில் வாங்கி வைத்துள்ளோம். மேலும், ஆற்றினை கடந்து செல்லும் வகையில் மண்ணால் தரைப்பாலம் அமைத்திருந்தோம்.

தொடர்ந்து பெய்த கனமழையால் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. ஆற்றில் தண்ணீர் படிப்படியாக குறைந்து வருவதால் கயிறுகட்டி ஒரு கரையில் இருந்து மற்றொரு கரைக்கு சென்று வருகிறோம். எங்கள் கிராமத்துக்கு சாலை அமைத்தும், ஆற்றின் குறுக்கே சிறிய தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி கூறுகையில், வேப்பனப்பள்ளி பிடிஓ., நிகழ்விடத்தில் ஆய்வு செய்து, சிறு பாலம் கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அறிக்கை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சாலை அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE