குடியாத்தம் நெல்லூர்பேட்டை ஏரியின் கரை பலவீனமானதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து சுமார் 40 மில்லியன் கனஅடி தண்ணீரை வெளியேற்றியுள்ளனர். மேலும், கரையை பலப்படுத்துவது குறித்து சென்னையில் இருந்து வந்திருந்த பொறியாளர்கள் குழுவினர் மண் மற்றும் தண்ணீர் மாதிரிகளையும் சேகரித்து சென்றனர்.
வேலூர் மாவட்டத்தில் பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள மிகப்பெரிய ஏரிகளில் ஒன்று குடியாத்தம் நெல்லூர்பேட்டை பெரிய ஏரி. சுமார் 400 ஏக்கர் பரப்பள வுடன் கூடிய ஏரியில் 102 மில்லியன் கனஅடி நீரை தேக்கி வைக்க முடியும். வடகிழக்கு பருவமழையால் கவுன்டன்யா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு நெல்லூர்பேட்டை ஏரி முழு கொள்ளளவை எட்டியது. ஏரியில் இருந்து உபரி நீர் தொடர்ந்து வெளியேறி வரும் நிலையில் கடந்த வாரம் 35 மீட்டர் நீளத்துக்கு ஏரிக்கரை திடீரென பலவீனம் அடைந்து கீழே இறங்கியது.
ஏரி முழுமையாக நிரம்பி இருப்பதால் எந்த நேரமும் கரை உடைபட்டு ஊருக்குள் தண்ணீர் வரும் அபாயம் இருந்ததால் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இரவு பகலாக கரையை பாதுகாக்க மணல் மூட்டைகளை அடுக்கி பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து தண்ணீரை வெளியேற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதால் ஏரியின் கலங்கல் பகுதியில் இருந்த சிமென்ட் தடுப்பை உடைத்துபடிப்படியாக தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். ஏரியில்இருந்து தண்ணீர் வெளியேற்றப் படும் நீரின் அளவை உதவி பொறியாளர் தமிழ்செல்வன், பணி ஆய்வாளர்கள் தங்கராஜ், சிவாஜி, சிவக்குமார் உள்ளிட்டோர் கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘பலவீனமடைந்த கரையை பாதுகாக்க 35 மீட்டர் நீளம், 5 மீட்டர் உயரம், 4 மீட்டர் அகலத்துக்கு சுமார் 10 ஆயிரம் மணல் மூட்டைகளை அடுக்கி உள்ளோம். கரை பலவீனத்துக்கான காரணம் குறித்த ஆய்வுக்காக சென்னை தரமணியில் உள்ள soil machanicsand research center செயற்பொறியா ளர் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் இன்று (நேற்று) வந்திருந்தனர்.
நெல்லூர்பேட்டை ஏரியின் மண் மற்றும் தண்ணீர் மாதிரிகளையும் அவர்கள் சேகரித்துச் சென்றுள்ளனர். 2 நாளில் அவர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் கரையை பலப்படுத்தும் பணிகள் தொடங்கும். ஏரியின் பாதுகாப்பு கருதி தற்போது 40 மில்லியன் கன அடிக்கு தண்ணீரை வெளியேற்றி உள்ளோம். இப்போதைக்கு நிலைமை சீராக உள்ளது. ஏரியில் இருந்து சுமார் 3 அடிக்கு தண்ணீர் மட்டத்தை குறைத்திருக்கிறோம்.
அணையின் பாதுகாப்பு குறித்து பகல் மற்றும் இரவு நேரங்களில் சுழற்சி முறையில் 3 பேர் வீதம் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்’’ என தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago