திருப்பத்தூர், ஆம்பூரில் - சர்க்கரை ஆலைகளை திறப்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் : பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு உறுதி

By செய்திப்பிரிவு

ஆம்பூர், திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை மீண்டும் இயக்குவது குறித்து ஓரிரு நாட்களில் நல்ல செய்தி வெளியாகும் என பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டம் மாதனூர் ஒன்றியம் மேல்சாணாங்குப்பம் கிராமத்தில் மின்னூர் மற்றும் சின்னபள்ளிகுப்பம் புலம்பெயர்ந்த இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த பயனாளிகளுக்கு புதிய வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியும், இலங்கை தமிழர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யா பாண்டியன் தலைமை வகித்தார். தி.மலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, சட்டப் பேரவை உறுப்பினர்கள் நல்லதம்பி (திருப்பத்தூர்), தேவராஜி (ஜோலார்பேட்டை), வில்வநாதன் (ஆம்பூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு 949 இலங்கை தமிழர்களுக்கு ரூ.10.03 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசும்போது, ‘‘இலங்கை அகதிகள் என்பதை புலம்பெயர்ந்த தமிழர்கள் என மாற்றியவர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின். அவர்களுக்கான நலத்திட்ட உதவிகளை தமிழகத்தில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் தான் முதன் முதலில் முதல்வர் தொடங்கி வைத்தார்.

ஆம்பூர் அடுத்த மின்னூர் முகாமைச் சேர்ந்த 76 குடும்பங் களுக்கு முதற்கட்டமாக ரூ.9.55 கோடி மதிப்பீட்டில் புதிய வீடுகள் கட்டித் தரப்பட உள்ளன. தொடர்ந்து சின்னபள்ளிகுப்பம் முகாமை சேர்ந்த 240 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்பட உள்ளன.திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர் மற்றும் திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை மீண்டும் இயக்க வேண்டுமென விவசாயிகள் தரப்பிலிருந்தும்,பொதுமக்கள், தொழிலாளர்கள் தரப்பிலிருந்து பல்வேறு கோரிக்கைகள் வந் துள்ளன. அந்த கோரிக்கைகளை தமிழக முதல்வருக்கும், தொழில்துறை அமைச்சருக்கும் தெரிவித்துள்ளேன். இரண்டு சர்க்கரை ஆலைகளையும் மீண்டும் இயக் குவது குறித்து ஓரிரு நாட்களில் நல்ல செய்தி வெளியாகும்’’. என்றார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சூரியகுமார், மாதனூர் ஒன்றியக் குழு தலைவர் சுரேஷ்குமார், ஆம்பூர் வட்டாட்சியர் அனந்த கிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வராசு நன்றி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்