திருப்பத்தூர் அருகே கனமழையால் - சேதமடைந்த தரைப்பாலம் : சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் அருகே கனமழையால் சேதமடைந்த தரைப்பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் அமைத்துத் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த வாரம் கனமழை பெய்தது. இதனால், திருப்பத்தூர் அடுத்த பொம்மிக்குப்பம் ஊராட்சியில் இருந்த தரைப்பாலம் கனமழையால் சேதமடைந்துள்ளது. இதனால், அவ் வழியாக பயணம் செய்ய முடியாமல் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இது குறித்து பொம்மிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, ‘‘கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் ஊராட்சியில் தரைப்பாலம் கட்டப்பட்டது. சமீபத்தில் பெய்த கனமழையால் 40 ஆண்டுகளுக்கு பிறகு தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் வழிந்தோடியது.

இதனால், பாலத்தின் இருகரைகளும் உடைந்து, பாலத்தில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது. எப்போது வேண்டுமானாலும் தரைப்பாலம் தண்ணீரில் அடித்துச்செல்லும் நிலை உள்ளது. திருப்பத்தூரில் இருந்து 15-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்ல இந்த பாலத்தை கடந்து செல்ல வேண்டும்.

கனமழை காரணமாக தரைப்பாலம் சேதமடைந்து இருந்தாலும் வேறு வழியின்றி ஆபத்தை உணராமல் அரசுப் பேருந்துகள், லாரிகள், டிராக்டர்கள், இரு சக்கர வாகனங்கள் பாலத்தை கடந்து நிதானமாக சென்று வருகின்றன.

எனவே, பழமை வாய்ந்த தரைப்பாலத்தை முழுமையாக அகற்றிவிட்டு அங்கு புதிய பாலம் கட்டித் தர மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்’’ என்றனர்.

இது குறித்து மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு விசாரித்தபோது, சமீபத்தில் பெய்த கனமழையால் என்னென்ன சேதம் ஏற்பட்டுள்ளது என்பது குறித்து பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக சேதமான சாலைகள், தரைப்பாலங்கள் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்கான பணிகளும் தொடங்கியுள்ளன.

எனவே, பொம்மிகுப்பம் பகுதியில் சேதமடைந்த தரைப்பாலம் ஆய்வு செய்யப்பட்டு, அதையே சீரமைப்பதா? அல்லது புதிய பாலம் அமைப்பதா? என்பது குறித்து விரைவில் தெரிவிக்கப்படும்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்