புதுச்சேரி அரசின் அலட்சியத்தால் - கடற்கரை மணல் பரப்பில் பரவிக் கிடக்கும் குப்பைகள் : அழிவின் தொடக்கத்தில் சதுப்பு நிலக்காடுகள்

By செ. ஞானபிரகாஷ்

அரசின் அலட்சியத்தால் புதுச்சேரிகடற்கரையில் புதிதாக உருவான மணல் பரப்பு குப்பை மேடாக காட்சியளிக்கிறது. தேங்கும் குப்பைகளால் சதுப்பு நிலக் காடுகளும் அழிந்து வருகின்றன.

புதுச்சேரி கடற்கரையில் கடல் அரிப்பை தடுத்து, செயற்கை மணல்பரப்பை உருவாக்க மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகம் மற்றும் தேசிய பெருங்கடல் தொழில் நுட்ப நிறுவனம் ஆகியவை இணைந்து ரூ.25 கோடியில் நவீன தொழில்நுட்பத்தில் புதிய திட்டம் உருவாக்கப்பட்டது. புதுச்சேரி தேங்காய்திட்டு துறைமுக முகத் துவாரத்தில் சேர்ந்துள்ள மணலை அள்ளி தூர்வாருவதற்காக விசாகப் பட்டினத்தில் உள்ள மத்திய அரசின் 'டிரஜ்ஜிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா' நிறுவனத்துடன் புதுச்சேரி துறைமுகம் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்தது. இப்பணி, ரூ.14.89 கோடி செலவில் நடந்தது. இதனால் புதிய கடற்கரை மணல் பரப்பு உருவானது. தற்போது அந்த மணல் பரப்பு எங்கும் குப்பைகளே காட்சி தருகின்றன.

இதுபற்றி சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம் விசாரித்தபோது, “புதுச்சேரியில் ஏராளமான கழிவுநீர் வாய்க்கால்கள் நேரடியாக கடலுக்கு வருகின்றன. அவை பராமரிக்கப்படு வதில்லை. முக்கியமாக கழிவுநீரைசுத்திகரித்து கடலில் விடப்படு வதில்லை. பொதுமக்களும் தங்கள் பங்குக்கு பல வாய்க்கால்களை குப்பைத் தொட்டிகளாக்கினர். தற் போது பெய்த மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட குப்பைகள் கடலில் சேர்ந்தன.

கடல் எப்போதும் தேவையற்ற குப்பைகளை கரைக்கு தள்ளிவிடும்.அந்த வகையில் தற்போது கரைக்குதள்ளப்பட்ட குப்பைகள் அனைத்தும் மணல் பரப்பில் சிதறிக் கிடக் கின்றன. கடல் மாசு ஏற்படுத்தும் பணியை அரசும், மக்களும் கூட்டாக செய்து வருகின்றனர். இதனால் மனிதர்களுக்கு மட்டுமில்லால் கடல் உயிரினங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் கடும் பாதிப்பு ஏற் பட்டுள்ளது” என்று குறிப்பிட்டனர்.

குப்பைகளால் அழியும்

சதுப்பு நிலக் காடுகள்

புதுச்சேரியில் தேங்காய்திட்டு, முருங்கப்பாக்கம், காக்காயத் தோப்பு, நல்லவாடு பகுதிகளில் மாங்குரோவ் தாவரங்கள் நிறைந்த சதுப்பு நிலக் காடுகள் உள்ளன. கடலுடன் ஆறு கலக்கும் கழிமுகப் பகுதியில் அமைந்துள்ள சதுப்பு நிலக் காடுகள் சுனாமி அலைகளின் சீற்றத்தை பெருமளவில் தடுத்து மக்களை காப்பாற்றியதில் முக்கி யப் பங்குண்டு.

தேங்காய்திட்டு பகுதி கழிமுகத் தில் அதிகளவில் கழிவுநீர் கலக்கி றது. பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட குப்பைகள் குவிந்து வருவதால் சதுப்பு நிலக்காடுகள் அழிந்து வருகிறது. தற்போது இக்காடுகள் அடர்த்தி குறையத் தொடங்கியுள்ளது. இதனால் இயற்கை சமநிலை கெடுகிறது. சதுப்பு நிலக்காடுகள் பகுதியை பாதுகாக்க சுற்றுச்சூழல் துறை, நகராட்சி, பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறை இணைந்து நட வடிக்கை எடுப்பதாக அறிவித்து பல ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால், இதுவரை எவ்வித நட வடிக்கையும் எடுக்கவில்லை.

இதுதொடர்பாக புதுச்சேரி சுற்றுச்சூழல் மற்றும் சதுப்பு நிலக்காடுகள் பாதுகாப்பு அபிவிருத்திசங்கத் தலைவர் செல்வமணி கண்டன் கூறியதாவது:

நகரத்தின் கழிவுநீர் தேங்காய் திட்டு வழியாக கடலில் கலக்கிறது. கழிவுநீரை சுத்திகரித்துதான் கடலுக்குள் விட வேண்டும். பல கோடி செலவில் தூர்வாரியபோது குப்பைகள் கடலில் சேர்க்காமல் இருக்க இரும்பு வலை அமைக்கக்கோரினோம். அதை அரசு கண்டுகொள்ளவில்லை. குறிப்பாக பொதுப்பணித்துறை மிக மெத்தனமாக உள்ளது. கழிவுநீர் சுத்திகரிக் கப்படாமல்தான் கடலுக்கு செல்கி றது. தற்போதைய மழையில் இங்கு தேங்கியிருந்த குப்பைகள் கடலுக்கு அடித்து செல்லப்பட்டன. அதில் பெரும்பகுதி தற்போது கடற்கரை மணல் பரப்புக்கு வந்திருக்க வாய்ப்புண்டு.

அத்துடன் சதுப்பு நிலக்காடுகள் பகுதியில் குப்பைகள் ஏராளமாககொட்டப்படுகின்றன. இதனால்காடுகளின் நிலை மோசமாகியுள் ளது. இக்காடுகள் அழிவின் தொடக்கத்தில் உள்ளன. நீர்காகம், பாம்புதாரா போன்ற பறவைகள் தேங்காய் திட்டு சதுப்பு நிலக்காடுகளில் அதிகம்பார்க்கலாம். வனத்துறை பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடாத தால் வேட்டையாடுதல் அதிகளவில் நடக்கிறது. பாம்புதாரா போன்ற பறவைகள் அழிவின் விளிம்பில் உள்ளன. இயற்கை அரணான சதுப்பு நிலத்தை பாதுகாக்க மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கியுள்ளது.

ஆனால் மாநில அரசு அந்நிதியை செலவிடுவதில் சரி யாக இல்லை. இது சமூகத்துக்கு கடும் சூற்றுச்சூழல் பாதிப்பை உண்டாக்கும் என்று குறிப்பிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்