கடலூரில் கடை ஒன்றில் - ஒரு கிலோ தக்காளி ரூ.30-க்கு விற்பனை : மக்கள் போட்டிப் போட்டு வாங்கிச் சென்றனர்

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. கிலோ ரூ.120 வரை விற்கப்படுகிறது. சென்னையில் அதிகபட்சமாக ரூ- 150 வரை சென்றது.

இந்நிலையில், கடலூர் முதுநகர் செல்லாங்குப்பம் பகுதியில் நேற்று காய்கறி கடை ஒன்றில், தக்காளி கிலோ ரூ.30-க்கு விற்கப்பட்டது. அந்தக் கடையில் மக்கள் குவிந்து போட்டி போட்டுக்கொண்டு தக்காளியை வாங்கிச் சென்றனர்.

இதுதொடர்பாக அந்தக் காய்கறி கடை உரிமையாளர் ராஜேஷிடம் கேட்டதற்கு, “கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் இருந்து சுமார் 1.5 டன் தக்காளி எங்கள் கடைக்கு வந்தது. அதை மிகமிகக் குறைந்த லாபத்தில், ஒரு கிலோ தக்காளி ரூ.30 என்ற அளவில் விற்பனை செய்கிறோம். கரோனா காலத்தில் வெங்காயம் கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டபோது, ரூ.10-க்கு விற்பனை செய்தோம். இப்படி விற்பனை செய்வது எங்களுக்கு ஒரு மனநிறைவைத் தருகிறது” என்றார்.

இக்கடையில், கூட்டம் அதிகமாக இருந்ததால், ‘ஒரு நபருக்கு ஒரு கிலோ தக்காளி மட்டுமே’ என்று ஒருகட்டத்தில் விற்பனை செய்யப்பட்டு, முழுவதும் விற்றுத் தீர்ந்தது. அதே நேரத்தில் கடலூரில் மற்ற கடைகளில் நேற்று ஒரு கிலோ தக்காளி விலை ரூ. 100 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE