பாலியல் தொந்தரவு பிரச்சினையால் மூடப்பட்ட - திண்டுக்கல் நர்சிங் கல்லூரியை திறக்க முடிவு : மாற்றுச் சான்றிதழ் பெற்றுச் செல்லும் மாணவிகள்

By செய்திப்பிரிவு

மாணவிகளுக்கு கல்லூரித் தாளாளர் பாலியல் தொந்தரவு அளித்ததால் மூடப்பட்ட தனியார் நர்சிங் கல்லூரியை திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதேநேரம் விருப்பத்தின்பேரில் கல்லூரியை விட்டுச் செல்லும் மாணவிகளுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் அருகே முத்தனம் பட்டியில் உள்ள நர்சிங் கல்லூரித் தாளாளர் ஜோதிமுருகன், மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவர் திருவள்ளூர் மாவட்டம் போளூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். தாளாளருக்கு உடந்தையாக இருந்த கல்லூரி விடுதி காப்பாளர் அர்ச்சனா கைது செய்யப்பட்டார்.

மாணவர்கள் போராட்டம் காரணமாக நவ. 19-ம் தேதி முதல் கல்லூரி இயங்கவில்லை. கல்லூரி மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மாவட்ட வருவாய் அலுவலர் லதா தலைமையில், திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி முதல்வர் விஜயகுமார், காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் லாவண்யா, நலப் பணிகள் இணை இயக்குநர் பாக்கியலட்சுமி உட்பட ஏழு பேர் கொண்ட குழுவை அமைத்து நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

இதையடுத்து கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் தங்களது விருப்பத்தின் பேரில் கல்லூரியில் இருந்து வெளியே செல்ல விரும்பினால் அவர்களது கல்விச் சான்றிதழ் மற்றும் நடப்பு ஆண்டு செலுத்திய கல்விக் கட்டணத்தில் இருந்து மூன்றில் ஒரு பங்கு திருப்பி வழங்கப்படும் எனக் குழுவினர் தெரிவித்தனர்.

இதனையடுத்து 60-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்களது கல்விச் சான்றிதழை நேற்று திரும்பப் பெற்றனர். கல்லூரியை வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் திறக்க ஏற்பாடு நடைபெறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்