இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம் :

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனத் தொடக்க விழா திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன், திருவாரூர் எம்எல்ஏ பூண்டி கே.கலைவாணன் ஆகியோர் பிரச்சார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

அப்போது, ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியது: பள்ளிக்கல்வித் துறை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலமாக, கரோனா பெருந்தொற்று காலத்தில் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை ஈடுசெய்ய இல்லம் தேடி கல்வி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக. திருவாரூர் மாவட்டத்தில் 10 ஒன்றியங்களிலும் 8 கலைக் குழுவினரைக் கொண்டு பொதுமக்களிடையே இத்திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த விழிப்புணர்வு கலைப் பிரச்சார வாகனம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்திலுள்ள 10 ஒன்றியங்களிலும் ஒரு நாளைக்கு 2 பள்ளிகள், 2 குடியிருப்பு பகுதிகள் என்ற வகையில் 10 நாட்களில் மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் பயிற்சி பெற்ற தேர்தெடுக்கப்பட்ட வீதி நாடக கலைஞர்களைக் கொண்டு இத்திட்டத்தின் குறிக்கோள் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் கொண்டு செல்லப்படும்.

கரோனா பெருந்தொற்று பொது முடக்க காலங்களில், 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களின் கற்றல் இழப்பை ஈடுசெய்தல் மற்றும் திட்டத்தின் முக்கிய நோக்கங்களாக பள்ளி நேரங்களை தவிர்த்து, மாணவர்களின் வசிப்பிடம் அருகே தன்னார்வலர்களைக் கொண்டு மாணவர்களுக்கு கற்றல் வாய்ப்பை வழங்குதல் போன்றவை இதன் நோக்கமாகும்.

எனவே, ஆர்வமுள்ளவர்கள் தன்னார்வலர்களாக செயலாற்றிட http://illamthedikalvitoschool.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE