காவிரி ஆற்றில் வடுகக்குடியில் புதைந்து சிதிலமடைந்து காணப்படும் - 190 ஆண்டுகள் பழமையான மணற்போக்கி சீரமைக்கப்படுமா? : சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு

By வி.சுந்தர்ராஜ்

190 ஆண்டுகளுக்கு முன்பு காவிரி ஆற்றில் திருவையாறு அருகே உள்ள வடுகக்குடியில் கட்டப்பட்ட மணற்போக்கி தற்போது ஆற்றுக்குள் புதைந்தும் சிதிலமடைந்தும் காணப்படுகிறது. இந்த மணற்போக்கியை சீரமைத்து, பாரம்பரிய சின்னமாக பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.

காவிரி ஆற்றில் கடந்த காலங்களில் தண்ணீருடன் அதிகளவில் மணலும் சேர்ந்து வந்ததால், திருவையாறுக்கு கிழக்கே தண்ணீர் சீராக செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, தண்ணீருடன் வரும் மணலை பிரித்து அதை கொள்ளிடம் ஆற்றுக்கு அனுப்பும் வகையில், திருவையாறு அருகே வடுகக்குடியில் (ஆச்சனுர்-வடுகக்குடி இடையே) 1831-ம் ஆண்டு 12 கண்மாய்களுடன் மணற்போக்கி அமைக்கப்பட்டது. கீழே 6 கண்மாய்கள், மேல 6 கண்மாய்கள் என இரண்டு அடுக்காக இந்த செங்கல் கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளன. இதுகுறித்த கல்வெட்டுகளும் இங்கு உள்ளன.

1934-ம் ஆண்டில் சர் ஆர்தர் காட்டன், டெல்டா மாவட்டங்களில் நீர் மேலாண்மையை ஒழுங்குபடுத்தும் வகையில், கல்லணையில் கொள்ளிடம் ஆற்றுக்கு மணலையும், தண்ணீரையும் பிரித்து அனுப்பும் வகையில் ஒரு மணற்போக்கியை அமைத்தார். இதனால் வடுகக்குடியில் கட்டப்பட்ட மணற்போக்கிக்கு மணல் வருவது குறைந்து, அதன் பயன்பாடும் குறைந்தது.

பின்னர், காலப்போக்கில் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட இந்த மணற்போக்கி, ஆற்றில் புதைந்த நிலையில் மரங்கள், செடி, கொடிகளால் சூழப்பட்டு, புதர் மண்டி காணப்படுகிறது. இந்நிலையில் இந்த பழமையான மணற்போக்கி குறித்து அறிந்த இப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும், இதுகுறித்து வெளி உலகுக்கு தெரியப்படுத்தும் வகையில், தற்போது அங்குள்ள புதர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து திருவையாறு பாரதி இயக்க அறக்கட்டளைச் சேர்ந்த பிரேமசாயி, குணாரஞ்சன் ஆகியோர் கூறும்போது, ‘12 கம்மா' என்று இப்பகுதி மக்களால் அழைக்கப்படும் இந்த மணற்போக்கி, காவிரியில் வண்டல் மண்படிவு அதிகம் இருந்ததால், அதை வெளியேற்ற வேண்டும் என்பதற்காக, 1831-ம் ஆண்டு என்.டபிள்யு.கிண்டர்ஸ்லி என்ற ஆங்கிலேய பொறியாளரால் வடுகக்குடியில் காவிரியிலிருந்து வண்டல் மண் கொள்ளிடத்துக்குள் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மணற்போக்கி மூலம், காவிரியில் படிந்திருந்த வண்டல் மண், தண்ணீருடன் உள்ளாறுகள் வழியாக கொள்ளிடம் ஆற்றுக்குச் சென்றது. இதனால் காவிரி ஆற்றில் வண்டல் மண் படிவது குறைந்து, காவிரி ஆறு பாதுகாக்கப்பட்டது.

காவிரியின் வரலாற்றில் கரிகாலன் கட்டிய கல்லணைக்கு பிறகு, கட்டப்பட்ட முதல் கட்டுமானமாக இந்த மணற்போக்கி இருக்க வாய்ப்புள்ளது.

கவனிக்கப்படாமல் உள்ள 190 ஆண்டுகள் பழமையான இந்த கட்டுமானம், காவிரி ஆற்றில் புதைந்த நிலையில், இடிந்தும், புதர் மண்டியும் சிதலமடைந்து காணப்பட்டது. இதையடுத்து, இந்த மணற்போக்கி குறித்து வெளி உலகுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக இங்கு மண்டியுள்ள புதர்களை அகற்றும் பணியில் இப்பகுதி பொதுமக்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்.

டெல்டாவின் நீர் மேலாண்மை வரலாற்றின் முக்கிய ஆதாரமாகத் திகழும் இந்த 12 மதகுகளுடன் கூடிய மணற்போக்கியை அரசு பாரம்பரிய சின்னமாக அறிவித்து, பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்