குறுக்குச்சாலை அருகே வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது : 25 பேர் பத்திரமாக மீட்பு

குறுக்குச்சாலை அருகே உள்ள வாலசமுத்திரம் ஊராட்சியில் வாலசமுத்திரம், வெங்கடாசலபுரம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த 2 கிராமங்களுக்கு இடையே காட்டாற்று ஓடை உள்ளது. மழைக்காலங்களில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வெளியேறும் தண்ணீர் இந்த ஓடை வழியாக வந்து, அரசரடி வழியாக தருவைகுளம் பகுதியில் உள்ள கடலில் கலக்கிறது.

மதுரை - தூத்துக்குடி நான்குவழிச்சாலை அமைப்பதற்காக வாலசமுத்திரம் ஊராட்சி பகுதியில் இடம் கையகப்படுத்தப்பட்டது. அப்போது, அங்கு வசித்த 7 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு உரிய இழப்பீடும், மாற்று இடமும் வழங்கப்பட்டது. ஆனால், அவர்கள் அரசு வழங்கிய இடத்தைபயன்படுத்தாமல், காட்டாற்று வெள்ளம் செல்லும் ஓடையின்அருகே வீடு கட்டி குடியேறினர். தற்போது அங்கு 9 குடும்பங்களைச் சேர்ந்த 25 பேர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பெய்தகன மழை காரணமாக காட்டாற்று ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அருகிலுள்ள வீடுகளை சூழ்ந்தது. தகவல் அறிந்து ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் நிஷாந்தினி, சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் முத்து தலைமையிலான வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று, தீயணைப்புத்துறையினர் உதவியுடன் வெள்ளத்தில் சிக்கியிருந்த மக்களை கயிறு கட்டி மீட்டு, பத்திரமான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE