சேத்துப்பட்டு அருகே கடன் வழங்கியதில் ரூ.17.74 லட்சம் முறைகேடு நடைபெற்றுள்ளது தணிக்கையில் தெரியவந்ததால், தேவிகாபுரம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க நிர்வாக குழுவை கலைத்து கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் ராஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் இயங்கியது. நிர்வாகக் குழுத் தலைவராக மணிகண்டன் தலைமையிலான குழு செயல்பட்டு வந்தது. இக்கடன் சங்கம் மூலமாக 2019-20-ம் நிதியாண்டில் மகளிர் சுய உதவிக் குழுக்கள், விவசாய நகை கடன் உள்ளிட்ட திட்டங்கள் மூலமா கடன் வழங்கியதில் 17 லட்சத்து 74 ஆயிரத்து 640 ரூபாய் முறைகேடு நடைபெற்று உள்ளது தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக தேவிகாபுரம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க நிர்வாக குழுவை கலைத்து கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் ராஜ்குமார் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு கடிதம் நிர்வாகக் குழுத் தலைவர் மணிகண்டன் மற்றும் துணைத் தலைவர் புருஷோத்தமனிடம் நேற்று வழங்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக முறையாக விசாரணை நடத்தாமல், நிர்வாகக் குழுவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி சங்க செயலாளர் குப்பன், ஏற்கெனவே பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார். இதையடுத்து தலைவர் உள்ளிட்டவர்கள் அளித்துள்ள விளக்கம், திருப்திகரமாக இல்லாததால், நிர்வாக குழு கலைக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago