திருப்பத்தூரில் ‘இல்லம் தேடி கல்வி’ என்ற விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யா பாண்டியன் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் கரோனா பெருந்தொற்று காரணமாக பொது முடக்க ஏற்படுத்தப்பட்ட காலங்களில் அரசு பள்ளிகளில் 1முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை சரிசெய்ய ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வாயிலாக 2021-22-ம் ஆண்டு "இல்லம் தேடி கல்வி திட்டம்" தமிழக அரசால் செயல்படுத்தப்படவுள்ளது.
இந்த திட்டமானது பள்ளி முடிந்த பின்பு மாலை நேரங்களில் இல்லம் தேடி கல்வி மையங்களில் கற்பித்தல் சேவையை மேற்கொள்ள இருக்கும் தன்னார்வலர்களை கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்தப் பணியில் ஈடுபடும் தன்னார்வலர்கள் 6 மாதங்களுக்கு தினசரி ஒரு மணி முதல் ஒன்றரை மணி நேரம் ஆடல், பாடல், நாடகம், பொம்மலாட்டம் போன்றவை மூலம் குழந்தைகளுக்கு புதுமையான முறையில் பாடம் சொல்லி கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் கீழ் திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்துார், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, கந்திலி, ஆலங்காயம், மாதனுார் ஆகிய 6 ஒன்றியங்களில் 99 கலைஞர்களை கொண்டு குடியிருப்புப் பகுதிகளில் 10 நாட்களுக்கு விழிப்புணர்வு கலைப்பயணம் மேற்கொள்ளப்படவுள்ளன.
திருப்பத்துார் ஆட்சியர் அலுவலகத்தில் இதற்கான விழிப்புணர்வு பிரச்சார வாகனப் பேரணி தொடங்க விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யா பாண்டியன் தலைமை வகித்து விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கொடியசைத்து வைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) வில்சன் ராஜசேகர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago