திருப்பத்துார் மாவட்டம் ஜமுனபுதூர் அடுத்த ஏ.கே.மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி முத்து (33). இவரது மகள் சஞ்சனா(3). அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சுரேஷின் மகன் கிஷாந்த்(3). இவர்கள், இருவரும் அப்பகுதியில் செல்லும் பாம்பாறு கரை ஓரத்தில் நேற்று காலை 10 மணியளவில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது, சற்றும் எதிர்பாராத நேரத்தில் கரையோரத்தில் விளை யாடிக்கொண்டிருந்த இரண்டு குழந்தைகளும் ஆற்றுக்குள் இறங்கினர். அப்போது, ஆற்று வெள்ளத்தில் இருவரும் அடித்துச் செல்லப்பட்டனர். அக்கம், பக்கத்தினர் குழந்தைகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், நீண்ட நேரமாகியும் குழந்தைகள் கிடைக்கவில்லை. இதையடுத்து, திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில், தீயணைப்புத் துறை உதவி மாவட்ட அலுவலர் பழனி, நிலைய அலுவலர் அசோகன் மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று ரப்பர் படகு மூலம் சுமார் ஒரு மணி நேரம் போராடி சேற்றில் சிக்கி உயிரிழந்த சஞ்சனா உடலை மீட்டனர்.
மேலும், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த கிஷாந்த்தை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சிறுவன் கிஷாந்த் உயிரிழந்தார்.
இதுகுறித்து திருப்பத்தூர் கிராமிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆற்று வெள்ளத்தில் சிக்கி இரு குழந்தைகள் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago